/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 10 வயதில் 'வைல்டு லைப்' புகைப்பட கலைஞர் 10 வயதில் 'வைல்டு லைப்' புகைப்பட கலைஞர்
10 வயதில் 'வைல்டு லைப்' புகைப்பட கலைஞர்
10 வயதில் 'வைல்டு லைப்' புகைப்பட கலைஞர்
10 வயதில் 'வைல்டு லைப்' புகைப்பட கலைஞர்
ADDED : ஜூன் 14, 2025 10:41 PM

லண்டனில் உள்ள நேச்சுரல் இஸ்டிரி மியூசியம், 1984 முதல் ஆண்டுதோறும், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது. 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பெங்களூரு சிறுவனுக்கு சிறந்த புகைப்படக்கலைஞருக்கான விருது கிடைத்துள்ளது.
இதுபோன்று பெங்களூரை சேர்ந்த விஹான் தாள்யா விகாசுக்கு, சிறுவயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் அலாதி பிரியம். பெங்களூரு புறநகர் பகுதிக்கு சென்றிருந்தபோது, கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கும் சிற்பம் அருகில் சிலந்தி இருப்பதை படம் எடுத்தார். 2023ல் நடந்த, 'வன விலங்கு புகைப்படக்கலைஞர்கள்' 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுக்கு அனுப்பி வைத்தார். அந்தாண்டு சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான விருது அவருக்கு கிடைத்தது.
இதுகுறித்து விஹான் தாள்யா விகாஸ் கூறியதாவது:
கடந்த 2020ம் ஆண்டு கோடை தான் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. தந்தையின் கேமரா மூலம், அதிசயங்களை தெரிந்து கொண்டேன். மேற்கு தொடர்ச்சி மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள பசவானி கிராமத்தை சேர்ந்த என் தந்தையின் பண்ணை, எனக்கு சரணாலயமாக தெரிந்தது.
பின், எனது தந்தை, அவரது நண்பர்களுடன் பெங்களூரு புறநகர் நல்லுாரு புளியந்தோப்புக்கு சென்றிருந்தோம். முன்னதாக, கோபாலசுவாமி கோவிலுக்கு சென்றபோது, அழகிய வேலைபாடுகளுடன் கிருஷ்ணர் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அப்போது அதன் அருகில் சிலந்தி இருந்தது. இரையை பிடிப்பதற்காக வலை பின்னிக் கொண்டிருந்தது. இதை புகைப்படம் எடுக்க காத்திருந்தேன். இரையை பிடிக்க வலை பின்னுவது, எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை.
ஆனால், அதை கேமராவில் கொண்டு வருவதற்காக நீண்ட நேரம் அதன் அருகில் நின்று, கேரமா வழியாக பார்த்து கொண்டிருந்தேன். இரை அதன் அருகில் வந்தபோது, அதை பிடிக்கும் காட்சிக்காக, 200 போட்டோக்கள் எடுத்தேன். அதில் ஒன்றுக்காக தான் எனக்கு விருது கிடைத்தது.
லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டிரி மியூசியம், 2022ல் இப்போட்டியை அறிவித்தபோது கூட, தேர்வுக்கு இந்த சிலந்தி படத்தை அனுப்ப வேண்டும் என்று எனக்கு உள் உணர்வு இருந்தது. நான் எடுத்த 200 'ஷாட்'களில், ஒன்றை தேர்வு செய்தேன். அது மற்ற 'ஷாட்'களை விட வித்தியாசமாக இருந்தது. அதை அனுப்பினேன். அதுவே எனக்கு விருது கிடைக்க காரணமானது.
இந்த புகைப்படம் எடுக்கும்போது அன்றைய தினம் மேகமூட்டமாக இருந்தது. மேகங்களுக்கு இடையே சூரியன் மறைந்து, மறைந்து கண்ணாமூச்சி ஆடியது. கிருஷ்ணரின் கைகளில் சூரிய ஒளி விழும் நேரத்தில், இந்த படத்தை எடுத்தேன்.
என்னுடைய படம் நடுவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதுவும் நடுவராக இருந்த வன விலங்கு பாதுகாப்பு புகைப்பட கலைஞர் திமான் முகர்ஜி, எனது படத்தை பார்த்து, 'இப்படம், எனக்கு பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவிக்கிறது. இது சக வாழ்வை பற்றி அழகாக பேசுகிறது' என்று பாராட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஹான் தந்தை விகாஸ் கூறியதாவது:
நான், என் பழைய டி.எஸ்.எல்.ஆர்., கேமராவை அவனிடம் கொடுத்தபோது, எதுவும் எதிர்பார்க்கவில்லை. இயற்கையின் அழகை தெரிந்து கொள்வதற்காக அவனுக்கு வழங்கினேன்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மகனுக்கு, கேமராவின் நுணுக்கங்கள் கொண்ட கையேடை வழங்கினேன். விரைவில் அதை புரிந்து கொண்டான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -