Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து விஜயேந்திரா... மாற்றம்? கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்கிறார்

பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து விஜயேந்திரா... மாற்றம்? கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்கிறார்

பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து விஜயேந்திரா... மாற்றம்? கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்கிறார்

பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து விஜயேந்திரா... மாற்றம்? கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்கிறார்

ADDED : ஜூன் 23, 2025 09:18 AM


Google News
Latest Tamil News
கர்நாடகாவில் பா.ஜ.,வை ஆட்சி கட்டிலில் அமர்த்த, முக்கிய பங்கு வகித்தவர் எடியூரப்பா. இவரது இளைய மகன் விஜயேந்திரா. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், கர்நாடக பா.ஜ., தலைவராக உள்ளார். இவரை தலைவராக நியமித்த போதே, சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் பகிரங்கமாக போர் கொடி துாக்கினர். எத்னால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், அமைதியாக இருந்த அதிருப்தியாளர்கள் தற்போது மீண்டும் வேலையை காட்ட துவங்கி உள்ளனர்.

நெருக்கடி


கூடிய விரைவில் டில்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து, காங்கிரசுடன் ஒப்பந்த அரசியல் செய்வதாக, விஜயேந்திரா மீது புகார் அளிக்க உள்ளனர். விஜயேந்திரா மீது அதிருப்தியில் இருந்தாலும், கட்சிக்காக வெளியே காட்டி கொள்ளாமல் இருக்கும் தலைவர்களை சந்தித்தும், தங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்கவும் அதிருப்தி அணி தயாராகி வருகிறது. இது எடியூரப்பா மகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா வந்த, மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், 'கர்நாடக பா.ஜ., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும்' என்று கூறி சென்றார். ஆனால் தேர்தல் நடத்துவதற்கான, எந்த அறிகுறியும் தற்போது வரை இல்லை.

இதற்கிடையில் பா.ஜ., மாவட்ட தலைவர் பதவிக்கு, தனக்கு நெருக்கமானவர்களை விஜயேந்திரா நியமித்து இருப்பதாகவும், இதன் மூலம் தனது தலைவர் பதவியை காப்பாற்றி கொள்ள முயற்சிப்பதாகவும், விஜயேந்திரா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வை அரவணைத்து செல்வது இல்லை; அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் ம.ஜ.த.,வை புறக்கணிப்பதாகவும் அவர் மீது புகார் எழுந்தது.

ஆலோசனை


சமீபத்தில் பெங்களூரு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ம.ஜ.த., தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என்று, விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களுக்கு, 'கிளாஸ்' எடுத்து சென்றார். எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்திய அமித் ஷா, 'நீங்கள் அடிக்கடி பா.ஜ., அலுவலகத்திற்கு சென்று, அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்காணித்து கொள்ளுங்கள்' என்றும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக தினமும், இரண்டு மணி நேரம் பா.ஜ., அலுவலகத்தில் எடியூரப்பா அமர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பொறுப்பு


இந்நிலையில், பெங்களூரில் விஜயேந்திரா நேற்று அளித்த பேட்டி:

கட்சி எனக்கு வழங்கிய தலைவர் பொறுப்பை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து உள்ளேன் என்று, தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். பெங்களூரு வந்த அமித் ஷாவை சந்தித்து, கர்நாடகாவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து 25 நிமிடங்கள் ஆலோசித்தோம்.

'பா.ஜ., தலைவர்கள் அனைவரும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்.

'அப்போது தான் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் இருப்பர். நம் மீது மக்களும் நம்பிக்கை வைப்பர். ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிக்கு, பொறுப்பு அதிகம்' என்று எங்களிடம் எடுத்து கூறினார்.

பா.ஜ., தேசிய கட்சி. யாரும் பதவியை எளிதாக பெற முடியாது. உழைப்பவர்களுக்கு பதவி நிச்சயம். அனைத்து மாவட்ட தலைவர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்துகளை பரிசீலித்து மாநில தலைவர் விஷயத்தில், மேலிடம் விரைவில் இறுதி முடிவு எடுக்கும். கட்சி எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், அதற்கு கட்டுப்படுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் வாயிலாக, 'தலைவர் பதவி மாற்றம் உறுதி' என, விஜயேந்திரா அதிருப்தி அணியினர் கூறி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us