Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 32 கை சிலையுடன் வீரபத்ரேஸ்வரர் சுவாமி

32 கை சிலையுடன் வீரபத்ரேஸ்வரர் சுவாமி

32 கை சிலையுடன் வீரபத்ரேஸ்வரர் சுவாமி

32 கை சிலையுடன் வீரபத்ரேஸ்வரர் சுவாமி

ADDED : செப் 23, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு கெம்பே கவுடா நகர் கவிபுரா குட்டத ஹள்ளியில் உள்ள சிறிய மலை குன்றின் மீது அமைந்துள்ளது, ஸ்ரீ பிரளய கால வீரபத்ர சுவாமி கோவில். 1,200 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், சிவபெருமானின் கணங்களில் ஒன்றான ஸ்ரீ வீரபத்ரேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மற்ற கோவில்களில் இரண்டு, நான்கு கைகள் கொண்ட வீரபத்ரேஸ்வரர் சிலை தான் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் 32 கைகள், அனைத்து கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியபடி வீரபத்ரேஸ்வரர் சிலை உள்ளது. சுவாமியின் சிலை சத்ருசம்ஹார வடிவில் உள்ளது. ராஜராஜ சோழர்கள், மாகடி கெம்பே கவுடா ஆகியோரால் இக்கோவில் கட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் வீரபத்ரேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை கடைசி செவ்வாய் அன்று, 'தேங்காய் துருவல்' அலங்காரத்தில் அருள்பாலிப்பார். இந்த தலத்தில் வீரபத்ரேஸ்வரர் உக்கிரமாக இருப்பதால் அவரை சாந்தப்படுத்துவதற்காக தேங்காய் துருவல் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

அமாவாசை தினத்தன்று மாலையில், சத்ரு சம்ஹார ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மூன்று அமாவாசை ஹோமங்களில் கலந்து கொண்டால், பக்தர்களுக்கு திருஷ்டி, பில்லி சூனியம் நீங்கும். திருமணம் ஆகாத பெண்கள், 5 வாரம் ஹோமங்களில் கலந்து கொண்டால் அவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புத்திர தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வீரபத்ரேஸ்வரரை வழிபட்டால் அவர்களின் தோஷம் நீங்கிவிடும்.

ஆவணி கடைசி ஞாயிறு அன்று இரவில் வீரபத்ரேஸ்வரர், முத்து பல்லக்கில் புறப்படுகிறார். தை மாதத்தில் மூன்று நாட்கள் ரத சப்தமி நடக்கிறது. சப்தமியின் முதல் நாள் கோவிலுக்கு எதிரே அக்னிகுண்டம் வளர்க்கின்றனர்.

வீரபத்ரேஸ்வரருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள், வீரபத்ரேஸ்வரர் வேடமணிந்து குண்டத்தில் இறங்கி, நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைக்கின்றனர். அதில் துாபம் போட்டு சுவாமிக்கு பூஜை செய்கின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு துளசி, வில்வம், எலுமிச்சை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோவிலின் நடை தினமும் காலை, 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்

- -நமது நிருபர் - .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us