/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா
ADDED : மார் 24, 2025 05:00 AM

பெங்களூரு: காலையில் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறியிருந்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, 78, மாலையில் ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார்.
பெங்களூரில் நேற்று காலையில் அவர் அளித்த பேட்டி:
கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் உரையை கிழித்து வீசிய சம்பவம் எனக்கு மனவேதனை அளிக்கிறது. இங்கு மூத்தவர் பேச்சுக்கு மரியாதை இல்லை. மேல்சபை சிந்தனையாளர்கள் நிறைந்த சபையாகும்; நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
இப்படிப்பட்ட மேல்சபையில், தலைவராக இருப்பது கவுரவமானதாகும். விதிகள்படி சபை நடக்காவிட்டால், அதன் தலைவராக இருப்பதில் எந்த பயனும் இல்லை என்று தோன்றுகிறது.
'சஸ்பெண்ட்' சரியல்ல
நான் இப்பதவிக்கு தகுதியானவரா, உறுப்பினர்களை கட்டுப்படுத்தாதது என் தவறா அல்லது வேறொருவரின் தவறா என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எனவே, நான் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருகிறேன்.
உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வது பாரம்பரியம் அல்ல. இரண்டு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யலாம்; ஆனால் ஆறு மாதம் என்பது சரியல்ல.
சி.டி.ரவி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் வழக்கில், என் அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுத்து உள்ளேன். சபையை முறையாக நடத்தவில்லை என்றால், அதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல.
விதிமீறல்
விவாதிக்க முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது, வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கின்றனர். முக்கிய மசோதாக்கள், விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன.
சட்டசபையில் கூச்சலோ, குழப்பமோ கூடாது என்ற விதியை, யாரும் பின்பற்றுவதில்லை.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதன்பின், அவர் தனது சொந்த ஊரான ஹூப்பள்ளி சென்றார்.
நேற்று மாலை அவர் அளித்த பரபரப்பு பேட்டி:
சபையில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை. கடந்த 45 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன். இன்றைய அரசியல்வாதிகளில், நான் மூத்தவன் என்பதை மறந்து விட்டனர். என் வயதுக்கு கூட மரியாதை இல்லை. சபையில் நான் பேசினாலும் யாரும் கவனிப்பதில்லை. இனி நான் சபையில் இருக்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன். எனவே என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இத்துடன், மேல்சபை துணைத் தலைவர் பா.ஜ.,வின் பிரானேசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'என் தனிப்பட்ட காரணங்களால், ராஜினாமா செய்கிறேன். இம்மாதம் 31ம் தேதிக்குள் ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர் அனுப்பிய கடிதத்தில், மார்ச் 18ம் தேதி என்று தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் தனது முடிவை, சில நாட்களுக்கு முன்பே எடுத்துள்ளது தெரிகிறது.