/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விஜயபுரா விமான நிலையத்தை திறப்பதில் சிக்கல் விஜயபுரா விமான நிலையத்தை திறப்பதில் சிக்கல்
விஜயபுரா விமான நிலையத்தை திறப்பதில் சிக்கல்
விஜயபுரா விமான நிலையத்தை திறப்பதில் சிக்கல்
விஜயபுரா விமான நிலையத்தை திறப்பதில் சிக்கல்
ADDED : ஜூன் 06, 2025 11:19 PM

விஜயபுரா: விமானத்தில் பறக்க வேண்டும் என்ற, விஜயபுரா நகர மக்களின் ஆசை, இன்னும் நிறைவேறவில்லை. புதிய விமான நிலையம் கட்டியும் மக்களுக்கு பயன்படவில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளிக்காததால், திறக்க முடியவில்லை.
விஜயபுராவில் விமான நிலையம் கட்ட, 2008ல் மாநில அரசு முடிவு செய்தது. விஜயபுராவின், மதபாவி அருகில் 727 ஏக்கர் நிலத்தில், விமான நிலையம் கட்ட அன்றைய பா.ஜ., அரசின் முதல்வர் எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அதன்பின் அரசுகள் மாறியதால், பணிகள் துவங்கவில்லை. அதன்பின் 2021ல் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்து, எடியூரப்பா முதல்வரானார்.
அவர், விஜயபுராவில் விமான நிலையம் கட்ட வேண்டும் என, உறுதிபூண்டு பணிகளை துவக்கினார். அதன்பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, பணிகளை தொடர்ந்தது. தற்போது பணிகள் முடிந்து, பயன்படுத்த தயார் நிலையில் உள்ளது. ஆனால் திறந்து வைக்க முடியவில்லை.
விஜயபுரா விமான நிலையம் உட்பட நாட்டின் 245க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலை கட்டடங்கள், பசுமை தீர்ப்பாயத்தில் அனுமதி பெறாமல் விதிமீறலாக கட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டி, அரசு சாரா தன்னார்வ அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
விசாரணை நடத்திய நீதிமன்றம், கட்டட பணிகளை துவங்க கூடாது, பணிகள் முடிந்த கட்டடங்களை திறக்கக் கூடாது என, உத்தரவிட்டுள்ளது. இதனால் விஜயபுரா விமான நிலையம் திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறியதாவது:
விஜயபுரா விமான நிலைய பணிகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. விமான நிலையம் விரைவில் திறக்கப்படும். பா.ஜ., ஆட்சியில் இருக்கும்போதே, பணிகளை நடத்த பசுமை தீர்ப்பாயத்தில், அனுமதி பெற்றிருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது.
சிலர் தேர்தலில் ஓட்டு பெறும் நோக்கில், அவசர, அவசரமாக பணிகளை துவக்கினர். பசுமை தீர்ப்பாயத்தில் தடையில்லா சான்றிதழ் பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விமான நிலைய பணிகளை துவங்குவதற்கு முன், பா.ஜ., அரசு முறைப்படி பசுமை தீர்ப்பாயத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாமல் பணிகள் மேற்கொண்டதால், தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. மத்திய அரசு ஒத்துழைப்புடன், விரைவில் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, விமான நிலையத்தை திறப்போம்.
- எம்.பி.பாட்டீல்,
தொழிற்துறை அமைச்சர்