Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முனிரத்னா மீதான பாலியல் வழக்கில் திருப்பம் குற்றமற்றவர் என கோர்ட்டில் அறிக்கை

முனிரத்னா மீதான பாலியல் வழக்கில் திருப்பம் குற்றமற்றவர் என கோர்ட்டில் அறிக்கை

முனிரத்னா மீதான பாலியல் வழக்கில் திருப்பம் குற்றமற்றவர் என கோர்ட்டில் அறிக்கை

முனிரத்னா மீதான பாலியல் வழக்கில் திருப்பம் குற்றமற்றவர் என கோர்ட்டில் அறிக்கை

ADDED : செப் 04, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: 'பெண் தொண்டர் அளித்த பலாத்கார புகாரில், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா குற்றமற்றவர்' என, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 61. இவர் மீது பீன்யாவை சேர்ந்த, 40 வயது பா.ஜ., பெண் தொண்டர், கடந்த மே 21ம் தேதி பலாத்கார புகார் அளித்தார்.

'என் வாயில் சிறுநீர் கழிக்க முயன்றதுடன், வைரஸ் பரப்பும் ஊசியை உடலில் செலுத்தினார். இதனால் மனம் உடைந்து துாக்க மாத்திரை தின்று, தற்கொலைக்கு முயன்றேன்' என, புகாரில் கூறி இருந்தார்.

இந்த புகாரின்படி முனிரத்னா, அவரது ஆதரவாளர்கள் வசந்த், சென்னகேசவா, கமல் ஆகியோர் மீது, ஆர்.எம்.சி., யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முனிரத்னா மீது ஏற்கனவே ஒரு பலாத்கார வழக்கு உள்ளதால், இரு வழக்குகளும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

உரிய ஆதாரம் பலாத்கார புகார் அளித்த பா.ஜ., பெண் தொண்டரை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தினர். மருத்துவ பரிசோதனையும் செய்தனர்.

இதில் அவர் துாக்க மாத்திரைகளை சாப்பிடவில்லை என்பது தெரிந்தது. முனிரத்னா மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களையும், எஸ்.ஐ.டி.,யிடம் அவர் கொடுக்கவில்லை.

இதனால், 'பலாத்கார வழக்கில், முனிரத்னா குற்றமற்றவர்' என, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.

இதுகுறித்து முனிரத்னா கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அவர்களுக்கு நான் நல்லவனாக இருந்தேன். பா.ஜ.,வுக்கு சென்றதும் கெட்டவனாக மாறிவிட்டேன். லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட மஞ்சுநாத் வெற்றி பெற்றது;

ஆர்.ஆர்.நகர் தொகுதியில் எனக்கு எதிராக போட்டியிட்டு, இரண்டு முறை குஸ்மா தோல்வி அடைந்தது ஆகியவை, என் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்ய காரணம். என் போஸ்டர் மீது காமுகன், பலாத்கார நபர் என்று எழுதினர்.

தெருவில் நடந்து சென்றபோது என் மீது கல் வீசினர்; முட்டை அடித்தனர். எஸ்.சி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிட்டேன்.

வேண்டுகோள் இப்போது என் மீது எந்த தவறும் இல்லை என்று, நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, அனைத்து உண்மைகளையும் கூறுவேன். என் எதிரிகளுக்கு ஒரு வேண்டுகோள். பெண்களை அழைத்து வந்து தயவு செய்து, பொய் பலாத்கார புகார் அளிக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us