'கண்டெடுக்கப்பட்ட 'ஜெலட்டின்' பயங்கர சத்தத்துடன் வெடிப்பவை'
'கண்டெடுக்கப்பட்ட 'ஜெலட்டின்' பயங்கர சத்தத்துடன் வெடிப்பவை'
ADDED : மே 12, 2026 11:40 PM
பெங்களூரு: 'பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த சாலையில் கண்டெடுக்கப்பட்ட, 'ஜெலட்டின்' குச்சிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டவை. முறையான இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் திறன் கொண்டது' என, தடய அறிவியல் ஆய்வகத்தின் அதிர்ச்சி அறிக்கை அளித்து உள்ளனர்.
பெங்களூரு கனகபுரா சாலையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சர்வதேச வாழும் கலை மையத்தில், கடந்த, 10ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அவர் சாலை மார்க்கமாக சென்ற வழியில், தத்தகுனி என்ற இடத்தில், சாலையோர காலி இடத்தில், அட்டை பெட்டியில் இருந்து 'ஜெலட்டின்' குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன.
பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, என்.ஐ.ஏ., தாமாக முன்வந்து விசாரணை துவக்கி உள்ளது.
பிரதமர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதாக, கர்நாடக காங்கிரஸ் அரசை, பா.ஜ., தலைவர்கள் விமர்சித்து வருவதுடன், விசாரணையை என்.ஐ.ஏ.,வுக்கு அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். முதற்கட்ட விசாரணை நடப்பதாகவும், விரைவில் என்.ஐ.ஏ.,விடம் விசாரணை ஒப்படைக்கப்படும் என்றும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கூறினார்.
இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மடிவாளாவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அங்கு நடந்த ஆய்வில், அந்த ஜெலட்டின் குச்சிகள், மூன்று ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டவை என்பது தெரிந்து உள்ளது.
கண்டெடுக்கப்பட்ட போது அவை வெடிக்கும் நிலையில் இல்லை என்றும், ஜெலட்டினுடன் இருந்த கம்பி மற்றும் மின்சார பொருட்கள் ஒரு ஆண்டிற்கு முன் தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
ஜெலட்டின் குச்சிகளுடன் கம்பியும், மின்சார பொருட்களும் முறையாக பொருத்தப்பட்டு இருந்து வெடித்து இருந்தால், அதிபயங்கர சத்தத்துடன் வெடிக்கும் திறன் கொண்டதாக இருந்து இருக்கும் என்றும் தடய அறிவியல் ஆய்வகத்தினர், போலீசாருக்கு அறிக்கை கொடுத்து உள்ளனர்.





