ADDED : மே 26, 2025 12:55 AM
கலக்கம்
மாவட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்ல கோல்டு சிட்டி 'மாஜி' பூக்கார குடும்ப வாரிசுக்காரர் போட்டியிட்டாரு. இவரு, கோலாரு கைக்கார அசெம்பிளிக்காரர் ஜெயிக்க போறாருன்னு பூவும், புல்லுக்கட்டும் சரியான போட்டின்னு தொடை தட்டினாங்க.
ஆனால், திடீரென பூ வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிட்டாரு. எதுக்காக கைக்காரரை எதிர்க்காமல் விலகினாரு. இதுக்கு யார் காரணம்; ஏதாவது கைமாறிச்சா. அசெம்பிளி தேர்தல்ல கூட கோல்டு சிட்டியில பூக்காரர் தோல்விக்கு யார் காரணமுன்னு தொண்டர்கள் மத்தியில சந்தேகம் ஏற்பட்டிருக்குது.
பூவுக்கு கோல்டு சிட்டியில் இப்படி ஒரு நிலை வரலாமான்னு பூ விசுவாசிங்க கலங்குறாங்க.
***
* ஸ்லோ மோஷன்
பயணியர் வசதிக்காக ப.பேட்டை சந்திப்பில், ரயில் பாலம் அமைக்கிற பணிகள் ஸ்பீடாக நடந்து வருது. பஸ் நிலையத்தின் பக்கத்திலேயே புதுசா ஒரு டிக்கெட் கவுன்டரும் வரப்போகுது. ஓரிரு ஆண்டிலேயே மொத்த பணிகளுமே முடிவடைய போகுது.
ஆனால், மாரிகுப்பம் -- குப்பம் இணைப்பு ரயில் பாதை அமைக்க 30 ஆண்டுகளாக முயற்சி நடக்குது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ. எல்லாமே 'ஸ்லோ மோஷனில்' ஆமை நகர்வதை விட மோசமாக உள்ளது.
பல கோடிகளை செலவு செய்றதா சொல்றாங்களே தவிர, வேலை முடிந்தபாடில்லை. இதுக்கு நல்ல காலம் எப்போ பிறக்க போகுதோ. குடுகுடுப்பைகாரங்களை தான் கேட்கணும்.
***
* ஏரிகளை காணோம்!
கோல்டு சிட்டியில் 9 ஏரிகளை காணவில்லை என மாவட்ட கலெக்டருக்கு புகார் போயிருக்கு. மாவட்டத்தில இருக்கிற 6 தாலுகாக்களில் 5 தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேலைகள் நடந்திருப்பதாக அறிவிப்புகள் வருகிறதே தவிர, இந்த கோல்டு சிட்டி மீது மட்டும் எதுக்கு ஆக் ஷன் எடுக்க தயங்குறாங்களோ.
ஒரு வட்டாட்சியர் 150 ஏக்கர் முறைகேடு செய்ததாக பரபரப்பு நிலவியது. ஆனால், முறையான விசாரணை நடந்ததா என்பது தான் கேள்வி. வனப்பகுதி ஏரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினவங்க, கோல்டு சிட்டி ஏரி நிலங்களை எப்போது கண்டுப் பிடிக்க போறாங்களோ.
***
* வளர்ச்சி தருமா?
சிட்டி வளர்ச்சிக்காக 'குடா'வை ரெண்டா பிரிக்க போறாங்க. இதில் 'புடா' என்று புதுசா உருவாக்கப் போறாங்க. இதுக்கு கோல்டு சிட்டி, ப.பேட்டை தொகுதி என ரெண்டு அசெம்பிளி தொகுதிகாரங்களும் ஒண்ணா முடிவெடுத்திருக்காங்க.
அப்படி உருவானால் ரெண்டு தலைவர்களுடன் ரெண்டு நிர்வாகம் நடக்க போகுதாம். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இரண்டு தொகுதிக்கும் ஒண்ணு சேர்ந்தாப்ல இருக்கிற குடாவில் நான்கு ஊழியர்கள் தான் இருக்காங்களாம். ஊழியர்கள் பற்றாக்குறையால் பல ஆண்டுகளாக திண்டாடுறாங்களாம்.
இந்த லட்சணத்தில புதுசா 'புடா' வேறு ஆரம்பிக்க போறாங்களாம். குடா ஆரம்பித்து இதுவரையில் ஒரே ஒரு லே - அவுட் மட்டுமே ஏற்படுத்தி இருக்காங்களே தவிர, வேற ஒண்ணும் உருப்படியா செய்யல.
***