/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிக்கபல்லாப்பூர் பா.ஜ., தலைவராக சுதாகர் ஆதரவாளர் பொறுப்பேற்பு சிக்கபல்லாப்பூர் பா.ஜ., தலைவராக சுதாகர் ஆதரவாளர் பொறுப்பேற்பு
சிக்கபல்லாப்பூர் பா.ஜ., தலைவராக சுதாகர் ஆதரவாளர் பொறுப்பேற்பு
சிக்கபல்லாப்பூர் பா.ஜ., தலைவராக சுதாகர் ஆதரவாளர் பொறுப்பேற்பு
சிக்கபல்லாப்பூர் பா.ஜ., தலைவராக சுதாகர் ஆதரவாளர் பொறுப்பேற்பு
ADDED : ஜூன் 17, 2025 10:57 PM

சிக்கபல்லாப்பூர்: சிக்கபல்லாப்பூர் பா.ஜ., தலைவராக எம்.பி., சுதாகர் அணியின், ராமசந்திர கவுடா பொறுப்பேற்றுக் கொண்டார். அதிருப்தியில் இருக்கும் சந்தீப் ரெட்டியுடன் பேசுவதாகவும் கூறி உள்ளார்.
சிக்கபல்லாப்பூர் மாவட்ட பா.ஜ., தலைவராக கடந்த ஜனவரி மாத இறுதியில் சந்தீப் ரெட்டி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு சிக்கபல்லாப்பூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தன்னிடம் ஆலோசிக்காமல் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சுயமாக முடிவு எடுப்பதாக அதிருப்தி வெளிப்படுத்தினார்.
சுயமரியாதைக்கு களங்கம் ஏற்பட்டால் பா.ஜ.,வில் இருந்து விலக தயார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கும், இந்த விஷயத்தை சுதாகர் கொண்டு சென்றார்.
இதனால் சந்தீப் ரெட்டியை தலைவராக நியமித்த உத்தரவை பா.ஜ., நிறுத்தி வைத்தது.
இதையடுத்து, சிக்கபல்லாப்பூர் மாவட்ட புதிய பா.ஜ., தலைவராக சுதாகர் ஆதரவாளரான ராமசந்திர கவுடா கடந்த 15ம் தேதி நியமிக்கப்பட்டார். நேற்று அவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் தலைவர் ராமலிங்கப்பா பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின் ராமசந்திர கவுடா கூறுகையில், ''பா.ஜ., ஒழுக்கமான கட்சி. யாரையும் தலைவராக தேர்ந்தெடுக்க யாரும் பரிந்துரைக்க முடியாது.
''இது காங்கிரஸ் பாணி அரசியல் இல்லை. மாவட்டத்தின் ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் கட்சியை ஒழுங்கமைப்பது என் பணி. இங்கு கோஷ்டி பூசலுக்கு இடமில்லை. சந்தீப் ரெட்டி எங்கள் கட்சியில் ஒருவர்.
''அவருக்கு கிடைத்த பதவி நிறுத்தி வைக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ளார். அவரிடம் பேசுவேன்,'' என்றார்.