Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது... கல் வீச்சு!: மசூதியில் இருந்து தாக்குதல் நடத்திய 21 பேர் கைது

மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது... கல் வீச்சு!: மசூதியில் இருந்து தாக்குதல் நடத்திய 21 பேர் கைது

மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது... கல் வீச்சு!: மசூதியில் இருந்து தாக்குதல் நடத்திய 21 பேர் கைது

மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது... கல் வீச்சு!: மசூதியில் இருந்து தாக்குதல் நடத்திய 21 பேர் கைது

ADDED : செப் 09, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள், விஜர்சனம் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்று மாண்டியாவின் மத்துார் டவுன் சன்னேகவுடா லே - அவுட்டில், பொதுமக்கள் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை, ஏரியில் கரைக்க நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

ராம் ரஹீம் சாலையில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மசூதியில் இருந்து சிலர், விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசினர். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஹிந்து அமைப்பினர் என 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்ந்து நடந்தது. விநாயகர் சிலை ஏரியில் கரைக்கப்பட்டது.

கொடி அகற்றம் கல்வீச்சு சம்பவம் குறித்து ஹிந்து அமைப்பினர் அளித்த புகாரில், மத்துாரின் முகமது அவேஸ், முகமது இர்பான், நவாஸ்கான், இம்ரான் பாஷா, உமர் பாரூக், சையத் தஸ்தகீர், காசிப் அகமது, முஷாலி பஷாலி, கலந்தர்கான், சுமர் பாஷா, முகமது அஜீஸ், இனாயத் பாஷா, முகமது கலீம் உட்பட 21 வாலிபர்கள், நேற்று முன்தினம் இரவே கைது செய்யப்பட்டனர். கைதான 21 வாலிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி, கல்வீச்சு நடந்த மசூதி முன் நேற்று காலை, பல்வேறு ஹிந்து அமைப்பினர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். உருவ பொம்மையை சாலையில் போட்டு தீ வைத்தனர். ஹிந்து அமைப்பின் வாலிபர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி, அதில் கட்டப்பட்டு இருந்த பச்சை கொடியை அகற்றி விட்டு, காவி கொடியை கட்டினார். மசூதி முன்பு சிறிய விநாயகர் சிலையை வைத்து போராட்டம் நடத்தியதுடன், டி.ஜே., பாடலை ஒலித்து, ஹிந்து அமைப்பினர் நடனம் ஆடினர். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர்.

கதறி அழுத பெண் நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த போலீசார், 'கலைந்து செல்லுங்கள்' என்று, ஹிந்து அமைப்பினரிடம் கூறினர். இதனால் போலீசார், ஹிந்து அமைப்பினர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வேறு வழியின்றி போலீசார் தடியடி நடத்த ஆரம்பித்தனர். ஹிந்து அமைப்பினர் சிதறி ஓடியதால், காலணிகள் கழன்று விழுந்தன. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். ஒரு பெண்ணின் மீதும் தடியடி விழுந்தது. வலியால் அலறிய பெண், சாலையில் அமர்ந்து வாயில் அடித்து கொண்டு கதறி அழுதார்.

மசூதி முன்பு இருந்து கலைந்த ஹிந்து அமைப்பினர், மத்துார் தாலுகா அலுவலகம் முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோன்று பெங்களூரு - மைசூரு சாலையை மறித்தும், ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

144 தடை அமல் இதையடுத்து, ஹிந்து அமைப்பின் முக்கிய பிரமுகர்களிடம், மாண்டியா கலெக்டர் குமார், எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி ஆகியோர் பேச்சு நடத்தினர். கல்வீச்சில் ஈடுபட்ட, 21 பேரை கைது செய்து உள்ளோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று கொண்ட ஹிந்து அமைப்பினர், போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

ஆனாலும், இன்று மத்துார் நகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க மத்துார் நகரில் 144 தடை உத்தரவு அமல்படு த்தப்பட்டு உள்ளது. பெங்களூரு, மைசூரு, ராம்நகர், ஹாசன், சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் இருந்தும், போலீசார் பா துகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா கூறுகையில், ''கல் வீசிய 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மத்துாரில் அமைதியை நிலைநாட்ட, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்,'' என்றார்.

யாராக இருந்தாலும் நடவடிக்கை

முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''மத்துாரில் மசூதிக்கு முன்பு, விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற போது கல்வீசப்பட்டு உள்ளது. இதை கண்டித்து ஹிந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், போலீசார் லேசான தடியடி நடத்தி உள்ளனர். கல்வீசிய 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தவறு செய்வோர் ஹிந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

''மாண்டியா பொறுப்பு அமைச்சர் செலுவராயசாமி, மத்துார் செல்கிறார். அவர் கொடுக்கும் தகவலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, எங்கும் பிரச்னை நடக்கவில்லை. மத்துாரில் நடந்து உள்ளது. ஹிந்து அமைப்பினரை, பா.ஜ., துாண்டி விடுகிறது. சமூகத்தில் அமைதியை சீர்குலைப்பது தான் அவர்கள் வேலை,'' என்றார்.

உதவும் காங்., அரசு

பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:

விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசப்பட்டதை கண்டித்து, போராட்டம் நடத்திய போது பெண் மீது தடியடி நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு அரசு வெட்கப்பட வேண்டும். மஹாராஷ்டிரா உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எந்த பிரச்னையும் இன்றி, விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. கர்நாடகாவில் மட்டும் ஏன் பிரச்னை ஏற்படுகிறது. மிலாடி நபி கொண்டாடிய போது எங்காவது பிரச்னை ஏற்பட்டதா.

கர்நாடக ஹிந்துக்கள் அமைதியை விரும்புவர்கள். ஹிந்து சமூகம் அனைத்து சமூகங்களையும் நேசிக்கிறது. இதை முதல்வர் சித்தராமையா புரிந்து கொள்ள வேண்டும். மத்துாரில் நடந்தது சிறிய சம்பவம் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகிறார். உங்கள் வீட்டு பெண்கள் மீது கல்வீசி, தடியடி நடத்தினாலும் சிறிய சம்பவம் என்று சொல்வீர்களா.

தர்மஸ்தலாவுக்கு எதிராக அவதுாறு பரப்புவோருக்கு, காங்கிரஸ் அரசு உதவியது. ஹிந்து அமைப்பின் கவி சித்தப்பா நாயக், சுகாஸ் ஷெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஹிந்துக்கள் அவமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானில் இருக்கிறோமா?

எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டி:

மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசப்பட்டதற்கு, காங்கிரஸ் அரசே நேரடி காரணம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாம் கர்நாடகாவில் உள்ளோமா, பாகிஸ்தானில் உள்ளோமோ என்று ஹிந்து அமைப்பினர் நினைக்கும் அளவுக்கு, நிலைமை மோசமாக உள்ளது.

கல்வீசப்பட்ட மசூதி முன்பு, போலீஸ் பாதுகாப்பு வேனை நிறுத்தாதது ஏன். மசூதி முன்பு ஹிந்து அமைப்பினர் செல்ல கூடாதா. மசூதி முன்பு உள்ள சாலை ஒருவர் வீட்டின் சொத்தா. மக்கள் அனைவரும் வரி கட்டுகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் மீது தடியடி நடத்தப்பட்டு உள்ளது. கல்வீசியவர்களை ஏன் தடியால் அடிக்கவில்லை. கெரேகோடு கிராமத்தில் ஹனுமன் கொடியை அகற்றினர்; கடந்த ஆண்டு நாகமங்களாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீசப்பட்டது.

இப்போது மத்துாரில் நடந்து உள்ளது. இதற்காக மாநில மக்களிடம், முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும். ஹிந்துக்களை அழிக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., - ம.ஜ.த., காரணம்

மாண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சர் செலுவராயசாமி கூறுகையில், ''மத்துாரில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கல்வீச்சு நடந்த சில மணி நேரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஹிந்து அமைப்பினர் அமைதியாகி விட்டனர்.

''ஆனால் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் ஹிந்து அமைப்பினரை துாங்க விடாமல், மொபைல் போனில் அடிக்கடி அழைத்து போராட்டம் நடத்தும்படி துாண்டி விட்டு உள்ளனர். இதுபற்றி சில ஹிந்து அமைப்பினர் என்னிடம் தெரிவித்தனர். எங்கள் அரசை எதிர்கொள்ள முடியாமல், ஹிந்து அமைப்பினரை துாண்டி விடுகின்றனர்,'' என்றார்.

போராட்ட எச்சரிக்கை

மாண்டியா எம்.பி.,யான மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், ''மாண்டியா அமைதிக்கு பெயர் போன மாவட்டம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு பிரச்னை நடக்கிறது. கெரேகோடு, நாகமங்களாவில் பிரச்னை நடந்தது. இப்போது மத்துாரில் நடந்து உள்ளது. தீய சக்திகள் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன.

''மாநிலத்தில் நடக்கும் கலவரம், பிரச்னைகளுக்கு காங்கிரஸ் அரசு நேரடி காரணம். இந்த அரசு வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. மத்துாரில் கல்வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, மாண்டியா எஸ்.பி.,க்கு அறிவுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மத்துாருக்கு வந்து நானே போராட்டம் நடத்துவேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us