/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாநிலம் முழுதும் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுதும் சிறப்பு அதிரடிப்படை
மாநிலம் முழுதும் சிறப்பு அதிரடிப்படை
மாநிலம் முழுதும் சிறப்பு அதிரடிப்படை
மாநிலம் முழுதும் சிறப்பு அதிரடிப்படை
ADDED : ஜூன் 13, 2025 11:09 PM

தட்சிண கன்னடா: ''வகுப்புவாத கலவரங்களை தடுக்க, கடலோர மாவட்டத்தில் அமைக்கப்பட்ட எஸ்.ஏ.எப்., எனும் சிறப்பு அதிரடிப்படை, தேவைப்பட்டால் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நேற்று வகுப்புவாத கலவரங்களை தடுக்க அமைக்கப்பட்ட 'சிறப்பு அதிரப்படை' பணியை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொக்கா மாவட்டங்களில் அடிக்கடி வகுப்புவாத கலவரங்களால் கொலைகள் நடந்தேறுகின்றன. குறிப்பாக தட்சிண கன்னடாவில் அதிகளவில் நடக்கின்றன.
இதனால் இங்கு மக்கள் தினமும் அச்சத்துடன் வசிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த அச்சத்தை போக்கவே, எஸ்.ஏ.எப்., அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே இப்படையை அமைத்தது கர்நாடகாவில் மட்டும் தான். வகுப்புவாத வெறுப்பு சம்பவங்கள் தடுக்க முடியாததால், இப்படை அமைக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத மோதல் ஏற்படும் என்று தெரிந்தால், அதை முன்கூட்டியே தடுக்க வேண்டும். இவர்கள், கடுமையான நடவடிக்கை எடுப்பர்.
உத்தர கன்னடாவின் கார்வாரில் தலைமை இடமாக கொண்ட நக்சல் எதிர்ப்பு படை இயங்கி வந்தது. இதில் இருந்த 656 அதிரப்படையினரில், 248 பேர், எஸ்.ஏ.எப்.,பில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மூன்று மாவட்டங்களுக்கென, மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும், டி.ஐ.ஜி.பி., - டி.எஸ்.பி., உதவி கமாண்டென்ட், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் இருப்பர்.
இப்படையினருக்கு மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள மைதானம் அருகில் அமைந்துள்ளது.
மங்களூரில் நடந்த தொடர் கொலைகளுக்கு பின், புதிய நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ள சுதிர் குமார் ரெட்டி, சிறப்பு படை டி.ஐ.ஜி.பி.,யாகவும் பணியாற்றுவார்.
அமைதியை ஏற்படுத்தவே இந்த படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் புரிந்து கொண்டால், இப்படையின் தேவை இருக்காது. அமைதியை கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு, வகுப்புவாத வெறுப்பு மட்டுமே கரும்புள்ளியாக உள்ளது. இங்கு அமைதியை ஏற்படுத்த இப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இப்படையை மாவட்டத்தின் 95 சதவீத மக்கள் வரவேற்பர். 10 - 15 நாட்களில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் அமைதி பேச்சு கூட்டம் நடத்தப்படும்.
தினேஷ் குண்டுராவ்,
சுகாதார துறை அமைச்சர்,
மாவட்ட பொறுப்பு