/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தட்சிண கன்னடா மக்களுக்கு சபாநாயகர் உருக்கமான கடிதம் தட்சிண கன்னடா மக்களுக்கு சபாநாயகர் உருக்கமான கடிதம்
தட்சிண கன்னடா மக்களுக்கு சபாநாயகர் உருக்கமான கடிதம்
தட்சிண கன்னடா மக்களுக்கு சபாநாயகர் உருக்கமான கடிதம்
தட்சிண கன்னடா மக்களுக்கு சபாநாயகர் உருக்கமான கடிதம்
ADDED : ஜூன் 11, 2025 11:43 PM

பெங்களூரு: தட்சிண கன்னட மாவட்டத்தில், சமீபத்தில் மதக்கலவரம் அதிகரிக்கிறது. கொலை, கொலை முயற்சி, தாக்குதல் நடக்கிறது. இதனால் மனம் நொந்து, சபாநாயகர் காதர் மாவட்ட மக்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
என் அன்புக்குரிய தட்சிண கன்னட மாவட்ட மக்களுக்கு, சமீப நாட்களாக மாவட்டத்தில் நடந்துள்ள சில சம்பவங்கள், ஒவ்வொருவருக்கும் வலியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை, உணர்வுகளை துாண்டும்படி உரையாற்றுவது, சமுதாயங்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்துவது போன்ற சம்பவங்கள், என் மனதுக்கு அமைதி இன்மை, ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் இந்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக, சபாநாயகராக, ஒரு அரசியல்வாதியாக மட்டுமின்றி, பொறுப்புள்ள குடிமகனாக, உங்களின் பக்கத்து வீட்டினராக, உங்களுடன் பேச விரும்புகிறேன். தட்சிண கன்னடா மாவட்டம், இங்குள்ள மக்கள், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் அடித்தளத்தில் நின்றுள்ளது. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என, அனைத்து சமுதாயத்தினரும் பல தலைமுறைகளாக அன்பு, நம்பிக்கையுடன் வாழ்கிறோம்.
ஒரே பள்ளிகளில் படித்துள்ளோம். பண்டிகைகளை சேர்ந்து கொண்டாடுகிறோம். சமத்துவமான மாவட்டத்தை பார்த்து வளர்ந்தோம். ஆனால் இப்போது நேர்மாறான சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றை சகிக்க முடியவில்லை. இத்தகைய சம்பவங்களுக்கு இனி, நாம் அனுமதிக்க கூடாது.
சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள், தேவையற்ற பேச்சுகள் அதிவேகமாக பரவுகின்றன. இது எரியும் தீயில், மேலும் நெய் ஊற்றி, சூழ்நிலையை மேலும் மோசமாக்குகின்றன. இது கோபத்தால், பயத்தால் அல்லது பகைமையால் பதிலளிக்கும் நேரம் அல்ல. அமைதி, கவுரவத்துடன் பதிலளிக்க வேண்டும். அனைத்து மதங்களையும் கவுரவிக்க வேண்டும்.
ஏற்கனவே போலீஸ் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன், நான் பேசியுள்ளேன். சமுதாயங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகள், யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.
சட்டம் மற்றும் ஒழுங்கு எதுவாக இருந்தாலும், நாம் ஒற்றுமையுடன், பொறுமை, அமைதியுடன் இருக்க வேண்டிய நேரம் இது.
நான் அனைத்து மதங்களின் தலைவர்களுடன், பல்வேறு சமுதாயங்களின் பிரதிநிதிகளுடன் நான் நிரந்தர தொடர்பில் இருக்கிறேன். அவர்களுடன் பேச்சு நடத்தி, சமுதாயத்தில் அமைதியை கொண்டு வர முயற்சிக்கிறேன். சூழ்நிலையை பதற்றமாக்க கூடாது.
இன்று நம் இதயம் வலியில் உள்ளது. மனதில் கோபம் நிறைந்துள்ளது. கொதிக்கும் நீரில் பிரதிபிம்பம் தெரியாது.
அதே போன்று, மனம் ஆக்ரோஷமாக இருக்கும் போது, சரியான முடிவுகள் எடுக்க முடியாது. சரி, தவறுகளை ஆராய முடியாது. எனவே எதிர் காலத்தை மனதில் வைத்து, சமத்துவத்துடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.