/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சின்னையாவுக்கு மேலும் 4 நாள் எஸ்.ஐ.டி., காவல் சின்னையாவுக்கு மேலும் 4 நாள் எஸ்.ஐ.டி., காவல்
சின்னையாவுக்கு மேலும் 4 நாள் எஸ்.ஐ.டி., காவல்
சின்னையாவுக்கு மேலும் 4 நாள் எஸ்.ஐ.டி., காவல்
சின்னையாவுக்கு மேலும் 4 நாள் எஸ்.ஐ.டி., காவல்
ADDED : செப் 04, 2025 03:41 AM

மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் கைதான சின்னையாவை, மேலும் நான்கு நாட்கள் எஸ்.ஐ.டி., காவலில் விசாரிக்க, பெல்தங்கடி நீதின்றம் அனுமதி கொடுத்துள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக மாண்டியாவின் சின்னையா பொய் புகார் அளித்தது அம்பலமானது. அவரை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, கடந்த மாதம் 22ம் தேதி கைது செய்தது.
மறுநாள் பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 12 நாட்கள் எஸ்.ஐ.டி., காவலில் விசாரிக்க, நீதிபதி விஜயேந்திரா அனுமதி அளித்தார்.
சின்னையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பின்னால் இருந்து இயங்கியது, ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் ஆகியோர் என்பது தெரிந்தது.
மகேஷ் திம்மரோடி, ஜெயந்த் வீட்டிற்கு சின்னையாவை அழைத்துச் சென்று, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்தனர். சில ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் சின்னையாவின் 12 நாள் எஸ்.ஐ.டி., காவல் நேற்று நிறைவு பெற்றது. பெல்தங்கடி நீதிமன்றத்தில் நீதிபதி விஜயேந்திரா முன்னிலையில் சின்னையா ஆஜர்படுத்தப்பட்டார்.
அறையின் கதவு அடைக்கப்பட்டது. ரகசியமான வகையில், நீதிபதி விசாரணை நடத்தினார். எஸ்.ஐ.டி., விசாரணை அதிகாரி ஜிதேந்திர குமார் தயமா, எஸ்.ஐ.டி., வக்கீல், சின்னையா தரப்பில் ஆஜரான மாநில சட்ட சேவை ஆணைய வக்கீல்கள் மட்டும், நீதிபதி அறையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 12 நாட்கள் நடந்த விசாரணை தொடர்பான அறிக்கை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சின்னையாவிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால், அவரை மீண்டும் தங்கள் காவலுக்கு அனுமதிக்கும்படி, எஸ்.ஐ.டி., வக்கீல் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விஜயேந்திரா, சின்னையாவை மேலும் நான்கு நாட்கள் எஸ்.ஐ.டி., காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். மீண்டும் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஜெயந்த் வீட்டில் நடந்த விசாரணையின்போது, தர்மஸ்தலா கூட்டுறவு சங்கம் தொடர்பான சில ஆவணங்கள் சிக்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆவணங்கள் அவரது வீட்டிற்கு, எப்படி சென்றது என்றும் விசாரணை நடக்கிறது.
தர்மஸ்தலாவுக்கு எதிராக அவதுாறு பரப்பியவர்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது பற்றி, அமலாக்கத்துறையும் விசாரணையை துவக்கி உள்ளது. எஸ்.ஐ.டி.,யின் ஒரு குழுவினரும், வெளிநாடுகளில் இருந்து பணம் வந்தது பற்றி விசாரிக்கின்றனர்.