தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு
தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு
தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு
ADDED : மார் 27, 2025 05:39 AM

ஷிவமொக்கா: போலீஸ் ஏட்டை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடியை காலில் சுட்டு பெண் இன்ஸ்பெக்டர் பிடித்தார்.
ஷிவமொக்கா மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் கடேகல் ஹபீத். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பல போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், இவர் சில மாதங்களாக போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருந்து வந்தார். தலைமறைவாக இருந்தாலும், கொலை சம்பவங்களுக்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ளார். இவரை பிடிப்பதற்கு போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்து வந்தனர்.
இவர், தன் கூட்டாளிகளுடன் இணைந்து பத்ராவதியில் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார். இது குறித்து பத்ராவதி பேப்பர்டவுன் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பத்ராவதி பேப்பர்டவுன் இன்ஸ்பெக்டர் நாகம்மா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
போலீசார் வருவதை தெரிந்து கொண்ட ரவுடி ஹபீத் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். இதில், ஹபீத் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
கைது செய்ய முயன்ற ஏட்டு அருணை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயற்சித்தார். இதற்கு பதிலடியாக இன்ஸ்பெக்டர் நாகம்மா ரவுடி ஹபீத்தின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார்.
அவர் நிலை குலைந்து போனார். பின்னர், கைது செய்யப்பட்டார். காயம் அடைந்த போலீசாரும், ரவுடியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரவுடி மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக மாவட்ட எஸ்.பி., மிதுன் குமார் தெரிவித்துள்ளார்.