Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குடிநீர் பாட்டில்கள் திரும்ப பெறுதல் விரைவில் விதிமுறைகள் கட்டாயம்

குடிநீர் பாட்டில்கள் திரும்ப பெறுதல் விரைவில் விதிமுறைகள் கட்டாயம்

குடிநீர் பாட்டில்கள் திரும்ப பெறுதல் விரைவில் விதிமுறைகள் கட்டாயம்

குடிநீர் பாட்டில்கள் திரும்ப பெறுதல் விரைவில் விதிமுறைகள் கட்டாயம்

ADDED : மார் 23, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : குடிநீர் பாட்டில்களை கண்ட இடங்களில், வீசி எறிவதைத் தடுக்கும் நோக்கில், குடிநீர் பாட்டில் விற்கும் கடைகள், காலி பாட்டில்களை குறைந்தபட்ச விலை கொடுத்து வாங்குவதை கட்டாயமாக்க, அரசு தயாராகிறது.

இதுகுறித்து, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, பெங்களூரில் அளித்த பேட்டி:

பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை வாங்குகின்றனர். குடித்து முடித்து காலியானதும் கண்ட இடங்களில் வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதை தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள், காலி பாட்டில்களை திரும்ப பெற்று கொண்டு அவற்றை விஞ்ஞான ரீதியில் அழிப்பது குறித்து, விதிகள் வகுக்கப்படும்.

சுற்றுச்சூழல்


குடிநீர் பாட்டில் உற்பத்தி செய்வோரே, அந்த உற்பத்திகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பின் விளைவுகளை சரி செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் சாலை, ஆறுகள், ஏரிகள், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க முடியும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் பொறுப்பு. எனவே நடவடிக்கைகள் கடுமையாக்கப்படுகின்றன.

மத்திய அரசும் கூட, ஒரு முறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் தயாரிப்பது, சேகரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்துள்ளது. தற்போது மாநில அரசும் விதிகள் வகுக்க முடிவு செய்துள்ளத்து.

பிளாஸ்டிக் பாட்டில்களால் வனப்பகுதி சூழலும் பாழாவதுடன் அங்கு வசிக்கும் உயிரினங்களுக்கும் அபாயம் ஏற்படுகிறது. மண்ணில் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பாட்டில்களை எரிப்பதால், காற்றில் அபாயமான அம்சங்கள் சேர்கின்றன. இந்த காற்றை சுவாசிக்கும் கால்நடைகள், மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கட்டாயம்


எனவே குடிநீர் பாட்டில் விற்கும் கடைகளே, குறைந்தபட்ச விலை நிர்ணயித்து காலி பாட்டில்களை வாங்குவது கட்டாயமாக்கப்படும். இது தொடர்பாக விதிகள் வகுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் காலி குடிநீர் பாட்டில்களை கடைகள் வாங்க வேண்டும். இவற்றை குடிநீர் விநியோகிப்பு நிறுவனங்கள் திரும்ப பெறுவது கட்டாயமாக்கப்படும். இந்த விதிகள் அமலுக்கு வந்தால், வீதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவதை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us