/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை
ADDED : மே 23, 2025 11:06 PM

பெங்களூரு:'பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்' என்று கர்நாடக போலீசாருக்கு, புதிய டி.ஜி.பி., சலீம் கடிதம் எழுதி உள்ளார்.
கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.,யாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த எம்.ஏ.சலீம், நேற்று முன்தினம், முழு நேர டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இத்துடன், அவர் வகித்து வந்த குற்ற விசாரணை பிரிவு டி.ஜி.பி.,யையும் சேர்த்து கவனிக்கிறார்.
போலீசாருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
கர்நாடக மாநில போலீஸ் துறை தலைவராக பதவியேற்றதில் மகிழ்ச்சி. மாநிலத்தின் அமைதியான, இணக்கமான, பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். சாதாரண ஊழியர்கள் முதல் மூத்த போலீஸ் அதிகாரிகள் வரை ஆதரவை நாடுகிறேன்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணவும், மாநிலத்தில் எந்த ஒரு இடத்திலும் விரும்பதகாத சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றங்களை தடுக்க முறையான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிப்பதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவும் உதவ வேண்டும்.
சமரசம்
போலீசார், நேர்மையாக இருக்க வேண்டும். உங்கள் நேர்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். இதை தான், நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். நீங்கள் நேர்மைக்கு முதலிடம் கொடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், நாம் அனைவரும் பணி செய்ய வேண்டும். போலீசார் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சுகாதார நிலையை மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்வது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். காரணமின்றி விடுமுறை எடுக்க வேண்டாம். நல்ல சேவை செய்யும் போலீசாருக்கு வெகுமதி அளிப்பது அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.
சாலை விபத்து
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு நமது முன்னுரிமை. இது நமது அனைவரின் பொறுப்பும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சட்டங்களை திறம்பட செயல்படுத்துவதன் மூலம், அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கலாம்.
போதை பொருளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். போதை பொருள் விற்பனை, சூதாட்டம், விபசாரம், அனைத்து வகையான ஒழுக்க கேடான செயல்களை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவுடிகள் மீது தொடர்ந்து கண் வைக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த உலகத்தில், உடல்ரீதியான குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும். திருடப்பட்ட பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் சென்றடைவதை தடுக்க உறுதி செய்ய வேண்டும்.
சாலைகளில் நல்ல போக்குவரத்து நிர்வாகத்தை செயல்படுத்துவதன் மூலம், சாலை விபத்துகளை தடுக்க வேண்டும். அப்பாவி உயிர்களை காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் மிகபெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. இதை ஒருபோதும் மறந்து விட கூடாது. நமது மாநிலத்தை நாட்டின் பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.