Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக செலவை அரசே ஏற்க வலியுறுத்தல்

பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக செலவை அரசே ஏற்க வலியுறுத்தல்

பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக செலவை அரசே ஏற்க வலியுறுத்தல்

பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக செலவை அரசே ஏற்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 23, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
தங்கவயல்: 'ராபர்ட்சன்பேட்டை பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலின் கும்பாபிஷேக செலவு முழுதையும் அரசே ஏற்க வேண்டும்' என, பிரம்மோற்சவ விழா கமிட்டியினர் வலியுறுத்தினர்.

ராபர்ட்சன்பேட்டையில் உள்ள ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில், சுவாமி சிலை சேதமடைந்துள்ளது. இதை சரி செய்து கும்பாபிஷேக பூஜைகள் செய்வதற்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஜீரணோத்தாரண கும்பாபிஷேகம் 2011ல் நடந்தது. அப்போது சுவாமி சிலையை சரியாக பிரதிஷ்டை செய்யவில்லை என்ற தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

அதிகாரிகள் ஆய்வு


அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின்படி, கோலார் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிலையை சரி செய்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து, நேற்று அறநிலையத்துறை தாசில்தார் ராஜகோபால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அவர் கூறுகையில், “இக்கோவிலுக்கு ஜீரணோத்தாரண கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அப்போது சுவாமியின் சிலை பகுதி பிரச்னையை சரி செய்யலாம். இதற்கு 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதில் 50 சதவீத தொகையை கோவில் நிர்வாகம் வழங்கும். மீதி சதவீத தொகையை பிரம்மோற்சவ கமிட்டியினர் வழங்க வேண்டும்,” என்றார்.

மலையாள உத்சவ கமிட்டி பொதுச் செயலர் அனந்த கிருஷ்ணன் பேசுகையில், “இந்த கோவில், கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது. இக்கோவிலில் கைவசம் உள்ள தொகை எவ்வளவு; வைப்பு நிதி எவ்வளவு உள்ளது என்ற விபரம் தேவை,” என்றார்.

கோவில் நிர்வாக அதிகாரி செல்வமணி கூறுகையில், ''வங்கிக் கணக்கில் 27 லட்சம் ரூபாயும், வைப்பு நிதியாக 1.20 கோடி ரூபாயும் உள்ளது,'' என்றார்.

அனந்த கிருஷ்ணன் கூறுகையில், ''இந்த தொகை எல்லாமே பக்தர்களின் காணிக்கை. அப்படி இருக்கும்போது, பிரம்மோற்சவ கமிட்டியினர் கூட பொதுமக்களிடம் வசூலித்து தான் தரவேண்டும். அடுத்த பிரம்மோற்சவத்துக்கும் பணம் வசூலித்து தான் நடத்த வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வழங்கட்டும்; கட்டாயம் என்ற நிபந்தனை வேண்டாம். எனவே அரசே இக்கோவிலின் கும்பாபிஷேக செலவை ஏற்க வேண்டும்,'' என்றார்.

மற்ற உத்சவ கமிட்டியினரும் இதையே வழிமொழிந்தனர்.

தாசில்தார் கூறுகையில், ''உங்களின் கருத்துகள் அரசுக்கு தெரிவிக்கப்படும். இது தொடர்பாக இம்மாதம் 29ம் தேதி அடுத்த கூட்டம் நடத்தி முடிவு செய்வோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us