Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குழந்தையுடன் அபாயமாக 'செல்பி' தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை

குழந்தையுடன் அபாயமாக 'செல்பி' தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை

குழந்தையுடன் அபாயமாக 'செல்பி' தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை

குழந்தையுடன் அபாயமாக 'செல்பி' தம்பதிக்கு போலீசார் எச்சரிக்கை

ADDED : ஜூன் 04, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
உத்தரகன்னடா : கோகர்ணா - அங்கோலாவுக்கு, இணைப்பு ஏற்படுத்த, புதிதாக கட்டப்பட்ட கங்காவளி பாலம் மீது, சின்னஞ்சிறு குழந்தையுடன் அபாயமான முறையில் செல்பி எடுத்த தம்பதியை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

உத்தரகன்னடா மாவட்டம், கோகர்ணாவில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் உள்ள கங்காவளி ஆற்றின் மீது, புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. கோகர்ணா - அங்கோலா இடையே இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில், இப்பாலம் கட்டப்பட்டது.

வெள்ளம்


சமீப நாட்களாக உத்தரகன்னடாவில் பரவலாக கனமழை பெய்ததில், கங்காவளி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வாகனத்தில் செல்லும் பயணியர், பாலத்தில் வாகனத்தை நிறுத்தி பாலத்தின் மீது ஏறி நின்று, போட்டோ, செல்பி எடுக்கின்றனர். இத்தகைய மக்களை கண்காணிக்க, போலீசார், கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.

இதில் ஆடியோ வசதியும் உள்ளது. யாராவது பாலத்தில் போட்டோ, செல்பி எடுக்க முற்பட்டால் ஆடியோ வழியாக எச்சரித்து அனுப்புகின்றனர்.

நேற்று மதியம் வாகனத்தில், சிறு குழந்தையுடன் சென்ற தம்பதி, பாலம் மீது வாகனத்தை நிறுத்தினர். குழந்தையை பாலத்தின் தடுப்பு சுவர் மீது நிறுத்தி, அபாயமான முறையில் செல்பி எடுக்க முற்பட்டனர். சிறிது கவனம் சிதறினால், குழந்தை தவறி ஆற்றில் விழும் அபாயம் இருந்தது.

ஆடியோ


இதை கண்காணிப்பு கேமரா வழியாக கவனித்த போலீசார், ஆடியோ மூலம் தம்பதியை எச்சரித்தனர். 'பாலத்தின் கீழே ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. உடனடியாக அங்கிருந்து செல்லுங்கள்' என, உத்தரவிட்டனர். கண்காணிப்பு கேமராக்களில் திடீரென போலீசாரின் குரல் கேட்டதும், வெலவெலத்த தம்பதி, போலீசாரின் உத்தரவுபடி குழந்தையை துாக்கி கொண்டு அங்கிருந்து பறந்தனர்.

போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, பலரும் பாராட்டினர். கோகர்ணா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் விரைவான நடவடிக்கையை பாராட்டி, அவருக்கு எஸ்.பி., நாராயண் தனிப்பட்ட முறையில் 5,000 ரூபாய் பரிசளித்தார்.

எஸ்.பி., நாராயண் அளித்த பேட்டி:

கோவில் கடற்கரை, குட்லே கடற்கரை, ஓம் கடற்கரை, பாரடைஸ் கடற்கரை உட்பட கோகர்ணாவின், அனைத்து கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆபத்து தவிர்ப்பு


இத்தகைய கேமராக்கள், சுற்றுலா தகவல் மையம் மற்றும் கோகர்ணா போலீஸ் நிலையத்துக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகன்னடா போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், நேரவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால் குழந்தை தவறி ஆற்றில் விழும் அபாயம் இருந்தது.

கோகர்ணா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளின் இடங்களுக்கு செல்லும் போது, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போலீசாரின் எச்சரிக்கையை சுற்றுலா பயணியர் மதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா வழியாக, ஆடியோ வசதி கொண்டு வந்தது, இதுவே முதன் முறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us