/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ட்ரோன் சர்வே'யில் முறைகேடு அம்பலம் வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு 'நோட்டீஸ்' 'ட்ரோன் சர்வே'யில் முறைகேடு அம்பலம் வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு 'நோட்டீஸ்'
'ட்ரோன் சர்வே'யில் முறைகேடு அம்பலம் வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு 'நோட்டீஸ்'
'ட்ரோன் சர்வே'யில் முறைகேடு அம்பலம் வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு 'நோட்டீஸ்'
'ட்ரோன் சர்வே'யில் முறைகேடு அம்பலம் வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு 'நோட்டீஸ்'
ADDED : மே 26, 2025 11:34 PM

பெங்களூரு : பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள் கட்டடம், வீடுகளின் அளவை பொய்யாக குறிப்பிட்டு, வரி ஏய்ப்பு செய்துள்ளதை, ட்ரோன் சர்வே வழியாக, பெங்களூரு மாநகராட்சி கண்டுபிடித்துள்ளது. இத்தகைய சொத்துதாரர்களுக்கு, நோட்டீஸ் அளித்து, வரி வசூலிக்க தயாராகி வருகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சி எல்லையில், 20 லட்சத்துக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. ஆனால் சொத்து வரி 5,000 கோடி ரூபாயை தாண்டுவது இல்லை.
வரி வசூலை அதிகரிக்க முடிவு செய்த மாநகராட்சி, பொது மக்கள் தங்களின் கட்டடம், வீடுகள் குறித்து தாமாக முன் வந்து, தகவல் தெரிவித்து வரி செலுத்த வாய்ப்பளித்தது.
நோட்டீஸ்
ஆனால் அப்போதும் வரி வசூல் அதிகரிக்கவில்லை. நகரில் உள்ள சொத்துகளை அடையாளம் காண, மாநகராட்சி ட்ரோன் சர்வே நடத்தியது. இதில் பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், கட்டடம், வீடுகளின் அளவை தவறாக குறிப்பிட்டு, வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிந்தது. இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வரி வசூலிக்க மாநகராட்சி தயாராகிறது.
ஏற்கனவே 15 லட்சம் சொத்துகளின் பரப்பளவு குறித்து, ட்ரோன் சர்வே வழியாக, ஒவ்வொரு சொத்துகளின் படங்கள், பரப்பளவுடன் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களுடன், சொத்துதாரர்கள் அறிவித்த சொத்துகளின் பரப்பளவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். இதன் மூலம் தவறான தகவல் தெரிவித்தவர்கள், அடையாளம் காணப்படுவர். இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
ரூ.1,000 கோடி
சொத்துகளின் பரப்பளவு குறித்து, தவறான தகவல் தெரிவித்தவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, தன்னிச்சையாக நோட்டீஸ் அனுப்பும், தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளோம்.
விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும். இவர்களிடம் வரி வசூலித்தால், வரும் நாட்களில் மாநகராட்சிக்கு கூடுதலாக, 1,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பெங்களூரு மாநகராட்சி, 2025 - 26ல் 6,000 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளது. மே இறுதி வரை சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் தள்ளுபடி சலுகை கிடைக்கும்.
ஜூன் முதல், சொத்து வரி பாக்கி வைத்தவர்கள் பற்றி, மண்டல வாரியாக பட்டியல் தயாரித்து நோட்டீஸ் அனுப்பப்படும். அவசியம் ஏற்பட்டால் சொத்துகளை ஜப்தி செய்து, ஏலம் விட்டு வரியை வசூலிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.