/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சம்பளம் இல்லை; வேலையை பறிக்க திட்டம் என்.ஹெச்.எம்., ஊழியர்கள் தவிப்பு சம்பளம் இல்லை; வேலையை பறிக்க திட்டம் என்.ஹெச்.எம்., ஊழியர்கள் தவிப்பு
சம்பளம் இல்லை; வேலையை பறிக்க திட்டம் என்.ஹெச்.எம்., ஊழியர்கள் தவிப்பு
சம்பளம் இல்லை; வேலையை பறிக்க திட்டம் என்.ஹெச்.எம்., ஊழியர்கள் தவிப்பு
சம்பளம் இல்லை; வேலையை பறிக்க திட்டம் என்.ஹெச்.எம்., ஊழியர்கள் தவிப்பு
ADDED : மே 14, 2025 11:07 PM
பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறையில், என்.ஹெச்.எம்., எனும் தேசிய சுகாதார மிஷின் திட்டத்தின் கீழ் பணியாற்றும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் உட்பட, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
என்.ஹெச்.எம்., திட்டத்தின் கீழ், சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் 653 டாக்டர்கள், நர்ஸ்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், டி குரூப் ஊழியர்கள் என, 28,258 பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் கொரோனா நேரத்தில், உயிரை பணயம் வைத்து பணியாற்றினர். தங்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்கும்படி, பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்தும் பலன் இல்லை.
இவர்களுக்கு மே 20ம் தேதியுடன் மூன்று மாதங்கள் ஊதியம் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. ஊதியம் வழங்க முடியாமல், என்.ஹெச்.எம்., ஊழியர்களில் பலரை, பணியில் இருந்தே நீக்க சுகாதாரத்துறை தயாராகிறது. இதற்காகவே ஏப்ரலில் முடிந்த ஊழியர்களின் ஒப்பந்த காலத்தை, வெறும் இரண்டு மாதங்கள் மட்டுமே நீட்டித்ததாக கூறப்படுகிறது.
அனைத்துப் பிரிவின், என்.ஹெச்.எம்., ஒப்பந்த ஊழியர்களின் பணித்திறனை மதிப்பிட, பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்திய பின், 15,000க்கும் மேற்பட்டோரை, பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. இதனால் என்.ஹெச்.எம்., ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.
என்.ஹெச்.எம்., ஊழியர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டித்து, மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தால், அங்கிருந்து ஊதிய தொகை வந்திருக்கும். ஆனால் இவர்களை பணியில் இருந்து, நீக்கும் பொருட்டு, என்.ஹெச்.எம்., திட்ட இயக்குனர், மத்திய அரசுக்கு ஊழியர்கள் விபரங்களை அனுப்பவில்லை. இவர்களுக்கு வழங்க சுகாதாரத்துறையிடம் நிதி இல்லை என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:
மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காவிட்டால், நாங்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது? ஊதிய உயர்வு ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்தபட்ச ஊதியமும் வழங்காமல், இழுத்தடிப்பது ஏன்?
எங்களின் ஊதியத்துக்கு, வங்கிகளில் கடனும் கிடைப்பது இல்லை. பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பது? 10 முதல் 20 ஆண்டுகள் எங்களின் உழைப்பை பெற்றுக் கொண்டு, 40 வயது தாண்டிய பின், எங்களை அரசு பணியில் இருந்து நீக்குகிறது. இந்த வயதில் எங்களுக்கு வெளியில் வேலையும் கிடைக்காது.
இவ்வாறு இவர்கள் கூறினர்.