/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ம.ஜ.த.,வின் அடுத்த தலைவராக உருவெடுக்கும் நிகில் குமாரசாமி ம.ஜ.த.,வின் அடுத்த தலைவராக உருவெடுக்கும் நிகில் குமாரசாமி
ம.ஜ.த.,வின் அடுத்த தலைவராக உருவெடுக்கும் நிகில் குமாரசாமி
ம.ஜ.த.,வின் அடுத்த தலைவராக உருவெடுக்கும் நிகில் குமாரசாமி
ம.ஜ.த.,வின் அடுத்த தலைவராக உருவெடுக்கும் நிகில் குமாரசாமி
ADDED : ஜூன் 17, 2025 11:02 PM

ம.ஜ.த., குடும்ப கட்சி தான் என்பதற்கு சான்றாக, நிகில் குமாரசாமிக்கு பயிற்சி கொடுக்கும் வகையில், 58 நாட்கள் மாநில சுற்றுப்பயணம் துவங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஜனதா பரிவாரில் பொம்மை, ராமகிருஷ்ண ஹெக்டே, தேவகவுடா, ஜே.எச்.பாட்டீல் மறைந்த சபாநாயகர் எம்.பி.பிரகாஷ், சித்தராமையா என பல முக்கிய தலைவர்கள் இருந்தனர்.
இக்கட்சி பல பிரிவுகளாக பிரிந்தது. 1999ல் தேவகவுடா தலைமையில் ம.ஜ.த., எனும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உதயமானது.
இதிலும், எம்.பி.பிரகாஷ், சித்தராமையா அங்கம் வகித்தனர். 2004க்கு பின், கட்சிக்குள் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அதிருப்தி அடைந்த சித்தராமையா, அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பின் காங்கிரசில் இணைந்தார்.
அதுபோன்று, ம.ஜ.த., மாநில தலைவராக இருந்த எம்.பி.பிரகாஷ், தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இணைய முற்பட்டார். இதையறிந்த தேவகவுடா, பிரகாஷை கட்சியில் இருந்து நீக்கினார்.
அதன்பின், கட்சியின் தேசிய தலைவராக தேவகவுடா, மாநில தலைவராக குமாரசாமி ஆகியோர் இருந்தனர். கட்சி பொறுப்புகளின் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் இக்கட்சியை 'குடும்ப கட்சி' என்று காங்கிரஸ், பா.ஜ., கட்சியினர் விமர்சிக்க துவங்கினர்.
கர்நாடகாவில் தேய்ந்து வரும் கட்சியை வளர்க்கவும், சோர்வடைந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் தேவகவுடா முடிவு செய்தார்.
இதன்படி, 2019 மாண்டியா லோக்சபா தேர்தல், 2023 ராம்நகர் சட்டசபை தேர்தல், 2024 தந்தையால் காலியான சென்னபட்டணா சட்டசபை இடைத்தேர்தலில், தனது பேரன் நிகில் குமாரசாமிக்கு சீட் கொடுத்தார். ஆனால் தொடர்ந்து மூன்று தேர்தல்களிலும் நிகில் தோல்வியை தழுவினார்.
ஆனாலும் மனம் தளராத நிகில், முக்கியமான பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இது தேவகவுடாவுக்கு மிகவும் பிடித்துள்ளது.
கடந்தாண்டு பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீதும், பெண்ணை கடத்த உதவியதாக ரேவண்ணா மனைவி பவானி மீதும் வழக்கு பதிவானது.
சூரஜ் ரேவண்ணா மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவானது. தொடர்ந்து கட்சிக்கு நெருக்கடிகள் எழுந்தது. இதனால் கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
ரேவண்ணாவின் ஒரு மகன் சிறையிலும், மற்றொரு மகன் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியிருப்பதால், குமாரசாமிக்கு பின் கட்சியை வழிநடத்த வாரிசு இல்லாததால், நிகிலை நம்பிக்கைக்குரிய தலைவராக்கவும் தேவகவுடா முடிவு செய்துள்ளனர்.
கட்சியை வலுப்படுத்தும் வகையில், 58 நாட்கள் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் நிகிலுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அவரும் சுற்றுப்பயணத்தை துவக்கி உள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தவும், செயல் வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளார். தேவகவுடாவின் வயது, குமாரசாமி மத்திய அமைச்சராகி விட்டதால், கர்நாடகாவில் ம.ஜ.த.,வின் முக்கிய தலைவராக நிகில் வளர்ந்து வருகிறார்.
அதே நேரத்தில், உட்கட்சி தேர்தல் நடத்தாமல், அவரை கட்சி தலைவராக நியமிப்பது பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
- நமது நிருபர் -.