Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தர்மஸ்தலா விவகாரத்தில் என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ., விசாரணை!; எஸ்.ஐ.டி., மீது நம்பிக்கை இல்லை என பா.ஜ., எதிர்ப்பு

தர்மஸ்தலா விவகாரத்தில் என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ., விசாரணை!; எஸ்.ஐ.டி., மீது நம்பிக்கை இல்லை என பா.ஜ., எதிர்ப்பு

தர்மஸ்தலா விவகாரத்தில் என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ., விசாரணை!; எஸ்.ஐ.டி., மீது நம்பிக்கை இல்லை என பா.ஜ., எதிர்ப்பு

தர்மஸ்தலா விவகாரத்தில் என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ., விசாரணை!; எஸ்.ஐ.டி., மீது நம்பிக்கை இல்லை என பா.ஜ., எதிர்ப்பு

ADDED : செப் 02, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
தட்சிண கன்னடா மாவட்டம், 'தர்மஸ்தலாவை பாதுகாப்போம்' என்ற பெயரில் நேற்று தர்மஸ்தலாவில் மாநில பா.ஜ., சார்பில் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பா.ஜ., தலைவர்கள், தர்மஸ்தலா மஞ்சுநாதரை தரிசித்தனர். அதன்பின், கோவில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டேவை சந்தித்தனர்.

பின், மாநாடு நடக்கும் இடம் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல், கட்சி தலைவர்கள் நனைந்தபடியே சென்றனர்.

மாநாட்டில் விஜயேந்திரா பேசியதாவது:

தர்மஸ்தலா குறித்து தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதற்கு பின்னால் ஒரு சதி உள்ளது. இவ்வழக்கு விசாரணையை, உடனடியாக என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு அல்லது சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஹிந்து விரோத சக்திகள், கோடிக்கணக்கில் பணம் பெற்று, தர்மஸ்தலா குறித்து பொய் பிரசாரம் செய்து வருகின்றன. காங்கிரஸ் அரசால், இந்த சக்திகளை அடக்க முடியாது. இதற்கு சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரணை மூலமாகவே நீதியை நிலைநாட்ட முடியும். தெருவில் கடந்து செல்பவர் புகார் அளித்ததும், முதற்கட்ட விசாரணை கூட நடத்தாமல், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளீர்கள்.

வெளியேற்றம் தர்மஸ்தலா வழக்கை விசாரிக்க எஸ்.ஐ.டி., அமைத்ததை முதலில் வரவேற்றோம். இவர்கள் விசாரிக்கும் போதே, தர்மஸ்தலா குறித்து தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. தவறான தகவல்களை பரப்புபவர்களை, 24 மணி நேரத்துக்குள் வெளியேற்றியிருக்க வேண்டும். இதில் அரசுக்கு சிறிதளவு அக்கறையும் இல்லை.

ஹிந்துக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். தர்மஸ்தலாவை பாதுகாப்போம் என்ற போராட்டத்தை எளிதாக எடுத்து கொள்ள வேண்டாம். இம்மாநாடு, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் தீய காங்கிரஸ் அரசை எச்சரிக்கும் மாநாடு. சுயமரியாதை கொண்ட ஹிந்து ஆர்வலர்கள் இங்கு வந்துள்ளனர். பணம் கொடுத்து யாரும் அழைத்து வரப்படவில்லை.

சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கிற்கு பின், மாநில உள்துறை அமைச்சர் மங்களூரு வந்திருந்தார். இருப்பினும், சுஹாஸ் ஷெட்டி வீட்டுக்கு செல்லவில்லை. ஒரு மாதமாக தர்மஸ்தலா பிரச்னை குறித்து தினமும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

சிறப்பு விசாரணை குழு மூலம், மாநில அரசு நேர்மையாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்; அது நிறைவேறவில்லை. தர்மஸ்தலா ஒரு சிறிய கோவில் அல்ல. கோடிக்கணக்கான பக்தர்களை கொண்ட புனித இடம்.

மாணவி சவுஜன்யா கொலை வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும். அக்குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். சிறுபான்மையினரை திருப்திபடுத்துவதை காங்கிரஸ் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் சதி மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசியதாவது:

நாட்டின் பெரும்பான்மையினருக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்து வருகிறது. தர்மஸ்தலா சம்பவம் அதன் தொடர்ச்சியாகும். சபரிமலையின் நம்பிக்கையை சீர்குலைக்கும் முயற்சிக்கு பின், தர்மஸ்தலாவின் பெயரை கெடுக்க, அவர்கள் முயற்சிக்க துவங்கி உள்ளனர்.

சிறுபான்மையினரை திருப்திபடுத்த, ஹிந்துக்களுக்கு எதிராக காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. அது அவர்களின் ரத்தத்தில் உள்ளது. இதுவே வேறு மதத்தை சேர்ந்த இடத்தில் உடல் புதைக்கப்பட்டிருந்தால், அங்கேயும் சென்று தோண்டுவார்களா. தர்மஸ்தலாவில் 16 இடங்களை தோண்டிய பின்னரும், அப்பணியை நிறுத்த காங்கிரஸ் அரசுக்கு மனமில்லை. மக்கள் கோபப்பட துவங்கிய பின்னரே, நிறுத்தினர்.

சித்தராமையா தலைமையிலான அரசில், பாவ கலசம் நிரம்பி உள்ளது. அரசின் முடிவு நெருங்கிவிட்டது. இது மாநில மக்களுக்கு சாபக்கேடு. சித்தராமையா மன்னிப்பு கேட்டு, நடந்த தவறை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us