/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நாளிதழ் விநியோகிப்பாளர்கள் தினம் கட்டுரை நாளிதழ் விநியோகிப்பாளர்கள் தினம் கட்டுரை
நாளிதழ் விநியோகிப்பாளர்கள் தினம் கட்டுரை
நாளிதழ் விநியோகிப்பாளர்கள் தினம் கட்டுரை
நாளிதழ் விநியோகிப்பாளர்கள் தினம் கட்டுரை

மழை, குளிரிலும் தொடரும் பணி
நவ்ரங் ஏஜென்ட் - ரவீந்திரநாத், 59.
நான் பி.யு., 2ம் ஆண்டு படிக்கும்போது, 18 வயதில், 1980ல், 'நாளிதழ் பாயாக' பணியில் சேர்ந்தேன். ஓராண்டுக்கு பின், நவ்ரங் ஏஜென்ட் ஆனேன். அதிகாலை 4:00 மணிக்கு நாளிதழ் பாயின்டுக்கு சென்றுவிடுவேன். என் தந்தை எனக்காக சைக்கிள் வாங்கி கொடுத்தார். மழையோ, குளிரோ என எதை பற்றியும் கவலைப்படாமல் சைக்கிளில் நாளிதழ்களை விநியோகித்து வந்தேன். என்னிடம் நாளிதழ் பாயாக பணியாற்றி வந்தவர்கள் சிலர் திடீரென விடுமுறை எடுத்து விடுவர். அந்த லைனுக்கு, நானே சைக்கிளில் சென்று விநியோகிப்பேன். கடந்த 45 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறன். நாங்கள் ஊருக்கு செல்லும் போது, என் மகன், நாளிதழ் விநியோகிக்கும் பணியை கவனித்து வருகிறார். நாளிதழ் பணி தவிர, புரொவிஷன் ஸ்டோர்ஸ் எனும் பலசரக்கு கடை நடத்தி வந்தேன். நாளிதழ் விநியோகஸ்தர்களின் வயதான காலத்தில், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும்.
நாளிதழ் விநியோகிப்பதில் பெருமை
எலஹங்கா --- வீரபத்ரா, 47.
நாளிதழ் விநியோகிக்கும் பணியில், 1991 முதல் ஈடுபட்டு வருகிறேன். இந்த வருமானத்தில் தான், பி.யு.சி., - ஐ.டி.ஐ., டெக்னிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். தற்போது நான் நன்றாக இருப்பதற்கு நாளிதழ் விநியோகஸ்தராக பணியாற்றியதே காரணம். தற்போது தினமும் 35,000 நாளிதழ்கள் விற்பனை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு நாளிதழுக்கு 30 பைசா கமிஷன் கிடைத்தது. ஆண்டுகள் செல்லச்செல்ல படிப்பவர்கள் அதிகமாகினர். நாளிதழ் நிறுவனங்களும் அதிகரித்தன. கமிஷன் தொகையும் அதிகரித்தது. என் மொபைல் போனில் 4,000 பேரின் எண்கள் உள்ளன. தினமும் காலை இவர்களின் வீடு, கடைகள், அலுவலகங்களில் நாளிதழ் சப்ளை செய்கிறோம். என்னிடம் விற்பனையாகும் பத்திரிகைகள் அனைத்தும், என் இரு மகன்களுக்கு தெரியும். சிறு வயதில் இருந்தே நாளிதழ் விநியோகிக்கும் பணி சுலபமானது அல்ல என்பதை மகன்களுக்கு உணர்த்தி உள்ளேன். இப்போது அவர்களாகவே இப்பணியை செய்கின்றனர். படிப்பு முக்கியம் என்பதால் அதில் கவனம் செலுத்த கூறியுள்ளேன். படிப்புடன் இப்பணியையும் செய்து வருகின்றனர்.
'ஒன் மேன் ஆர்மி'
மல்லேஸ்வரம் - ரகுராம், 58.
ஹாசன் மாவட்டம், ஹாசன் தாலுகாவில் ஏழை குடும்பத்தில் பிறந்தேன். அங்கு எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தேன். அதன் பின், பெங்களூரு வந்தேன். இங்கு மெஜஸ்டிக்கில் நாளிதழ் விநியோகஸ்தர் குப்தாவிடம் 'பீட் பாய்' எனும் நாளிதழ் சப்ளையராக பணியாற்றினேன். கர்நாடகாவில் நாளிதழ் விநியோகிப்பதில் குப்தா தான் 'டாப்' ஆக இருந்தார். நான், 1986 முதல் 1996 வரை பீட் பாயாகவும்; 1996 முதல் 2004 வரை சப் ஏஜென்டாகவும் இருந்தேன். 2004 நாளிதழ் ஏஜென்சியை குப்தா விட்டுவிட்டார். அதன் பின், நாளிதழ் நிறுவனங்கள், என்னிடம் ஏஜென்சி கொடுத்தனர். கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு நாளிதழ் பாயின்டுக்கு சென்றுவிடுவேன். தற்போது பீட் பாயாக, மாணவர்கள் மட்டுமின்றி, வயதானவர்களும் பணியாற்றுகின்றனர். 'ஒன் மேன் ஆர்மி' என்று சொன்னால் மிகையாகாது. அரசு, எங்களுக்கு விபத்து காப்பீடு மட்டுமின்றி, வாழ்நாள் முழுதும் இன்சூரன்ஸ் செய்து தர வேண்டும்.
வீட்டுக்கு 'பத்திரிகை நிவாஸ்' பெயர்
டி.தாசரஹள்ளி - கிருஷ்ணமூர்த்தி, 60.
கடந்த 35 ஆண்டுகளாக நாளிதழ் விநியோகிக்கும் பணியில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டுள்ளேன். ஆரம்பத்தில் என் தாய் மாமாவிடம் 1992ல் பணியாற்றி வந்தேன். ஆரம்பத்தில் நாளிதழ் கமிஷன் குறைவு, ஊதியமும் குறைவு. அப்போது, வெகு தொலைவில் உள்ள வீடுகளுக்கு சைக்கிளில் சென்று விநியோகித்து வந்தேன். ஏஜென்டாக மாறிய பின், பத்திரிகை நிறுவனங்கள், கமிஷன் தொகையை அதிகரித்தது. என்னிடம் 30க்கும் மேற்பட்டவர்கள் நாளிதழ் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது ஒரு நாளைக்கு 12,000 நாளிதழ்கள் விநியோகித்து வருகிறோம். நாளிதழ் பாய்கள், சிலர் சைக்களிலும், சிலர் இரு சக்கர வாகனத்தில் சென்று நாளிதழ் விநியோகித்து வருகின்றனர். தற்போது ரியல் எஸ்டேட் தொழிலுடன், நாளிதழ் விநியோகித்து வருகிறன். டி.தாசரஹள்ளியில் எனது வீட்டுக்கு 'பத்திரிகை நிவாஸ்' என்று பெயர் சூட்டி உள்ளேன். பள்ளி, கல்லுாரியில் படிக்கும் மாணவர்களே நாளிதழ் விநியோகிப்பவர்களாக உள்ளனர். ஏழை குடும்பத்தினர், தங்கள் படிப்புக்காகவும், குடும்பத்தின் வருமானத்துக்காகவும் பணி செய்கின்றனர். அதிகாலை நாளிதழ் விநியோகிக்கும் போது ஏதாவது அசம்பாவிதத்தால், அவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.