Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விமானத்தில் வந்த குரங்குகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்

விமானத்தில் வந்த குரங்குகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்

விமானத்தில் வந்த குரங்குகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்

விமானத்தில் வந்த குரங்குகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்

ADDED : மார் 26, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு மலேஷியாவில் இருந்து பெங்களூருக்கு கடத்தி வரப்பட்ட ஆறு குரங்கு குட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து பெங்களூருக்கு குரங்குகளை கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கடந்த 23ம் தேதி கோலாலம்பூரில் இருந்து மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதில் இருந்து இறங்கி சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட நபரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். டிராலி பேக்கில், 'நான்கு சியாமங்க் கிப்பன்ஸ், இரண்டு நார்தன் பிக் டெய்ல்டு மகாகு' என, ஆறு குரங்கு குட்டிகள் அடைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து, எட்டு மணி நேரம் சூட்கேசில் அடைபட்டிருந்த குரங்குகள், மூச்சு விட சிரமப்பட்டன. உடனடியாக அவற்றை வெளியே எடுத்து, அவற்றுக்கு தண்ணீர், உணவு கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். குரங்குகளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த விநாயகமூர்த்தி கோட்டீஸ்வரன், 24, என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த இருவர், மலேஷியாவில் இருந்து இந்த குரங்குகளை கொண்டு வந்து கொடுத்தால், 10,000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தாக கூறியதாக தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டு முதல் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வழியாக, விலங்குகளை கடத்துவது அதிகரித்து வருகிறது' என்றனர்.

வன விலங்கு நிபுணர்கள் கூறியதாவது:

சமீப காலமாக, வெளிநாட்டு விலங்குகளை, தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்க பலரும் விரும்புகின்றனர். சியாமங்க் கிப்பன்ஸ் குரங்குகள், பெரும்பாலும் மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் வனப்பகுதிகளில் வாழக்கூடியவை.

நார்தன் பிக் டெய்ல்டு மகாகு குரங்குகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. இந்த குரங்குகளின் இனப்பெருக்கு அமைப்பு, மனிதர்களை போன்று உள்ளதால், இவை உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us