Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.50 கோடி கடன் பெற்று தருவதாக கள்ள நோட்டுகள் கொடுத்தவர் கைது

ரூ.50 கோடி கடன் பெற்று தருவதாக கள்ள நோட்டுகள் கொடுத்தவர் கைது

ரூ.50 கோடி கடன் பெற்று தருவதாக கள்ள நோட்டுகள் கொடுத்தவர் கைது

ரூ.50 கோடி கடன் பெற்று தருவதாக கள்ள நோட்டுகள் கொடுத்தவர் கைது

ADDED : ஜூன் 12, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
ஹூப்பள்ளி: பெண் ஒருவருக்கு 50 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி, 60 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிக் கொண்டு, கள்ள நோட்டுகளை கொடுத்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிர மாநிலத்தின் புனேயை சேர்ந்த பெண் ஒருவர், ஓராண்டுக்கு முன் மைசூருக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு மைசூரை சேர்ந்த முகமது ஆசிப், 50, என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அவ்வப்போது சந்தித்து பேசினர்.

ஒரு முறை, 'எனக்கு வங்கி அதிகாரிகள், முக்கிய புள்ளிகள் அறிமுகம் உள்ளனர். பெரிய, பெரிய நிதி நிறுவனங்ளின் முக்கியஸ்தர்கள் எனக்கு தெரியும். பல தொழிலதிபர்களுக்கு, நான் கடன் பெற்று தந்துள்ளேன்' என, முகமது ஆசிப் கூறியுள்ளார்.

இதை நம்பிய புனே பெண், 'என் மகள் மும்பையில் கட்டுமான பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 50 கோடி ரூபாய் தேவைப்படுகிறது' என கேட்டார்.

அதற்கு முகமது ஆசிப், 'கடன் ஒப்புதல் ஆக சிறிது பணம் கொடுக்க வேண்டும்' எனக் கூறி, படிப்படியாக 60 லட்சம் ரூபாய் வாங்கினார். 'முதற்கட்டமாக உங்களுக்கு 2 கோடி ரூபாய் ஒப்புதல் ஆகியுள்ளது' எனக்கூறி, ஹூப்பள்ளிக்கு வரும்படி அவரை முகமது ஆசிப் அழைத்தார்.

அவரும் தனக்கு வேண்டப்பட்ட சிலருடன், ஜூன் 5ம் தேதி ஹூப்பள்ளிக்கு வந்தார். ஹூப்பள்ளியின் கோகுல் சாலையில் உள்ள ஹோட்டல் முன் இரண்டு சூட்கேஸ்களில் பணத்தை நிரப்பி முகமது ஆசிப், அப்பெண்ணிடம் கொடுத்தார். 'இதில் 1 கோடியே 87 லட்சத்து 45,000 ரூபாய் உள்ளது. மீதம் 48 கோடி ரூபாய் படிப்படியாக கிடைக்கும்' என, கூறினார்.

பெண்ணும் பணத்தை தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு எடுத்து சென்றார். 'பணத்தை எப்படி மும்பைக்கு கொண்டு செல்வது?' என, ஆலோசித்தபடி சூட்கேசை திறந்து பார்த்தார். அப்போதுதான் அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது.

முகமது ஆசிப், பெண்ணிடம் கொடுத்த 1.87 கோடி ரூபாயில், 5,000 ரூபாய் மட்டுமே உண்மையான நோட்டுகள் இருந்தன. மேற்புறம் உண்மையான 500 ரூபாய் வைத்திருந்தார். உட்புறம் கள்ள நோட்டுகள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண், ஹூப்பள்ளியின் சி.சி.பி., போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து, வித்யாநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது. போலீசாரும் விசாரணை நடத்தி, முகமது ஆசிப்பை தேட துவங்கினர். நேற்று முன்தினம், உத்தரகன்னடாவின், முருடேஸ்வராவில் கண்டுபிடித்து, கைது செய்தனர்.

இவர் புனே பெண்ணுக்கு மட்டுமின்றி, பெங்களூரிலும் பலருக்கு கடன் வாங்கி தருவதாக நம்ப வைத்து, லட்சக்கணக்கான ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார். கள்ள நோட்டுகளை தமிழகத்தில் அச்சிட்டு கொண்டு வந்தது, விசாரணையில் தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us