/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா வெற்றி செல்லாது! மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்த ஐகோர்ட் உத்தரவு மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா வெற்றி செல்லாது! மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்த ஐகோர்ட் உத்தரவு
மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா வெற்றி செல்லாது! மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்த ஐகோர்ட் உத்தரவு
மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா வெற்றி செல்லாது! மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்த ஐகோர்ட் உத்தரவு
மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா வெற்றி செல்லாது! மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்த ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 17, 2025 07:23 AM

கர்நாடகாவில் கடந்த 2023ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், கோலார் மாவட்டம், மாலுாரில், பா.ஜ., - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. பா.ஜ.,வின் மஞ்சுநாத் கவுடா, காங்கிரசின் நஞ்சே கவுடா உட்பட, 15 பேர் போட்டியிட்டனர்.
ஓட்டு எண்ணிக்கை நாளன்று, இருவரும் மாறி மாறி குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தனர். ஓட்டு எண்ணிக்கை முடிவில், காங்கிரசின் நஞ்சே கவுடா 50,955 ஓட்டுகளும்; பா.ஜ.,வின் மஞ்சுநாத் கவுடா 50,707 ஓட்டுகளும்; ம.ஜ.த.,வின் ராமேகவுடா, 17,433 ஓட்டுகளும் பெற்றனர்.
நஞ்சே கவுடா, 248 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அப்போது, இதற்கு மஞ்சுநாத் ஆட்சேபனை தெரிவித்தார். இது குறித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், 'மாலுார் தொகுதியில், 15 பேர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை அன்று, 15 பேரின் ஏஜென்டுகளுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்து தரவில்லை. ஓட்டு எண்ணிக்கை ஒரே அறையில் நடந்திருக்க வேண்டும். ஆனால், இத்தொகுதி ஓட்டு எண்ணிக்கை மட்டும், இரு அறைகளில் நடத்தப்பட்டு உள்ளது.
'இது மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் விதிகளையும், தேர்தல் ஆணையம் பிறப்பித்த விதிகளையும் மீறி உள்ளது. எனவே, நஞ்சே கவுடாவின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும். இத்தொகுதி ஓட்டுகளை மீண்டும் எண்ண உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு மீதான விசாரணை, நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நேற்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இதன்படி, நேற்று காலை நீதிமன்றம் கூடியதும், நீதிபதி தேவதாஸ் கூறியதாவது:
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான வீடியோ பதிவை தாக்கல் செய்ய, மாவட்ட தேர்தல் அதிகாரி வெங்கடராஜுவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், வீடியோ பதிவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தவறிவிட்டார் என்பது, இந்திய தேர்தல் கமிஷனுக்கு அறிவிக்கப்படுகிறது. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, நஞ்சே கவுடா வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது. உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நான்கு வாரத்துக்குள் இத்தொகுதி ஓட்டுகளை மீண்டும் எண்ணி, முடிவுகளை சட்டப்படி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
அப்போது நஞ்சேகவுடா தரப்பு வக்கீல், இந்த உத்தரவுக்கு தடை கோரி, மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'மனுதாரர் நஞ்சே கவுடா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில், இன்று இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறது' என்றார்.