/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குப்பை சேகரிப்பதில் தனக்கென தனி இடம் பிடித்தார் கிருஷ்ணா குப்பை சேகரிப்பதில் தனக்கென தனி இடம் பிடித்தார் கிருஷ்ணா
குப்பை சேகரிப்பதில் தனக்கென தனி இடம் பிடித்தார் கிருஷ்ணா
குப்பை சேகரிப்பதில் தனக்கென தனி இடம் பிடித்தார் கிருஷ்ணா
குப்பை சேகரிப்பதில் தனக்கென தனி இடம் பிடித்தார் கிருஷ்ணா
ADDED : மே 10, 2025 11:36 PM

குப்பை சேகரிக்கும் தொழில் என்பது குப்பைகளை சேகரித்து மறுசுழற்சி அல்லது அப்புறப்படுத்துல் போன்ற செயல்களை செய்வது ஆகும். இந்த தொழில் செய்வோருக்கு ஊதியம் பெரிதாக கிடைப்பது இல்லை. ஆனாலும் சிலருக்கு வாழ்வாதாரமாக இந்த தொழில் உள்ளது.
குப்பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இந்த தொழில் ஆபத்தானதும் கூட. குப்பைகளில் பல வித தீங்கு இருக்கலாம். இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு சமூகத்தின் உரிய அங்கீகாரம் கிடைப்பதும் இல்லை. அவமானங்களை சந்திப்பவர்கள் ஏராளம். பெங்களூரில் வசிக்கும் தமிழர் கிருஷ்ணா, 39 குப்பை சேகரிக்கும் தொழிலில் தனக்கென ஒரு இடம் பிடித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி
தனது வாழ்க்கை பயணம் பற்றி கிருஷ்ணா கூறியதாவது:
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே பெங்களூரின் ஜே.சி.ரோட்டில் உள்ள சிமென்ட் காம்பவுன்ட் பகுதியில் தான். எங்கள் பூர்விகம் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி. எனது தாத்தா, அப்பா குப்பை சேகரிக்கும் தொழில் செய்தனர். மூன்றாவது தலைமுறையாக குப்பை சேகரிக்கும் தொழில் செய்கிறேன்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தால், சிறிய வயதில் இருந்து நிறைய கஷ்டத்தை சந்தித்து உள்ளேன். ஜாதி பாகுபாடு, சமூக அவமானம், தீண்டாமையால் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கிறேன். பள்ளி படிக்கும் போது காலையில் பள்ளிக்கு சென்று, மாலையில் வீட்டிற்கு வந்ததும் எனது அம்மாவுடன் சேர்ந்து குப்பை சேகரிக்க செல்வேன். நான் குப்பை சேகரிக்கும் தொழில் செய்வதை வகுப்பு நண்பர் ஒருவர் பார்த்து மற்ற நண்பர்களிடம் கூறினார். இதனால் என்னை ஒதுக்கி வைத்தனர். வகுப்பில் கடைசி பெஞ்ச்சிற்கு விரட்டி அடித்தனர்.
மக்காத குப்பை
ஏழாம் வகுப்பு படிக்கும் போது தொடர்ந்து படிக்கலாமா, குப்பை சேகரிக்கும் தொழிலை தொடரலாமா என்று முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தொழிலை தான் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து படிப்பை துறந்தேன். குப்பை சேகரிக்கும் தொழில் செய்வோரை மனிதர்களாக இந்த சமூகம் மதிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்கான முயற்சிகளில் களம் இறக்கினேன்.
பெங்களூரு மாநகராட்சி குப்பை சேகரிப்பவர்களுக்கு, கடந்த 2011 ம் ஆண்டில் கழிவு சேகரிப்பாளர்கள் என்ற அடையாள அட்டை வழங்கியது. இது தான் எங்களுக்கு கிடைத்த முதல் கவுரவம். அதன்பின் சில தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து குப்பைகளை மறுசுழற்சி செய்ய ஆரம்பித்தேன். சாலையோரம் வீசப்படும் துணிகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட மக்கா குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்க, மாநகராட்சி ஒரு இடம் ஒதுக்கி கொடுத்தது.
அந்த இடத்தில் இருந்து தான், இப்போது மக்கா குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய அனுப்பி வைக்கிறேன். இந்த தொழிலில் வருமானம் குறைவு தான் என்றாலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிப்பு செய்கிறோம் என்ற மன திருப்தி உள்ளது. வீடு, வீடாக சென்று பழைய துணிகள், பயன்படுத்தாத பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கிறேன்.
சமூக பொறுப்பு
கானா, பாங்காங், நேபாளம், அர்ஜென்டினா நாடுகளுக்கு சென்று, அங்கு குப்பை சேகரிப்போரை சந்தித்து, அவர்களுக்கு ஊக்கம் அளித்து உள்ளேன். சர்வதேச கழிவு சேகரிப்பாளர்கள் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளேன். சிகரெட் புகைப்பவர்கள் புகைத்து விட்டு சாலையில் வீசும் சிகரெட்டை சேகரித்து, அதில் உள்ள பட்சை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
கர்நாடகாவில் 4.25 லட்சம் குப்பை சேகரிப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் சமூக, பொருளாதாரரீதியாக பின்தங்கி உள்ளனர். அவர்களுக்கு அரசு அனைத்து உதவியும் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை.
எனக்கு திருமணம் முடிந்து மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனர். மனைவி கவிதா. பழைய துணிகளில் எப்படி கலை வண்ணத்தை புகுத்துவது என்பது தொடர்பான எம்பிராய்டரிங் படித்து உள்ளார். பழைய சேலைகளில் இருந்து 'ஹேண்ட் பேக்' தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.