Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுற்றுலா பயணியர் விரும்பும் கொடசாத்ரி மலை அருவி

சுற்றுலா பயணியர் விரும்பும் கொடசாத்ரி மலை அருவி

சுற்றுலா பயணியர் விரும்பும் கொடசாத்ரி மலை அருவி

சுற்றுலா பயணியர் விரும்பும் கொடசாத்ரி மலை அருவி

ADDED : ஜூன் 26, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஷிவமொக்கா, சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்ற மாவட்டம். ஷிவமொக்காவில் உள்ள கொடசாத்ரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,343 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இதில் 1,220 அடி செங்குத்தான நிலையில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு சென்ற பின் பசுமை போர்வை போர்த்திய இயற்கையின் அழகை கண்டு ரசிக்கலாம்.

ஆதிசங்கரர் தியானம் செய்ததாக கூறப்படும் விநாயகர் குகை, இந்த மலையின் உச்சியில் தான் உள்ளது. அந்த குகைக்குள் பழங்கால விநாயகர் சிலையை தரிசிக்கலாம். தெளிவான வானிலை நிலவும் நாளில் கொடசாத்ரி மலை உச்சியில் இருந்து பார்த்தால் அரபிக்கடல், கொல்லுார் நகரத்தையும் காணும் வாய்ப்பு கிடைக்கும்.

கொடசாத்ரி மலை இயற்கைக்கு மட்டும் இல்லை. அருவிக்கும் புகழ்பெற்றது. மலை உச்சியில் இருந்து 5 கி.மீ., துாரம் நடந்து சென்றால் காப்புக் காட்டுக்குள் மறைந்திருக்கும் ஹிட்லுமனே நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.

பாறைகள் மற்றும் பசுமையை பின்னணியில் பால் போன்ற வெள்ளை நீர், கீழே விழுவதை பார்ப்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அருவியின் உச்சியில் சிறிய குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் ஆழம் குறைவு என்பதால், அதில் குளித்தும் மகிழலாம். அருவியின் உச்சியில் இருந்து பார்க்கும்போது சுற்றிலும் பசுமையாக இருக்கும். இந்த அருவிக்கு செல்வது அவ்வளவு எளிது இல்லை.

செங்குத்தான பாறைகள், அடர்ந்த காடுகள் வழியாக தான் செல்ல வேண்டும். அருவியை அடைய இரண்டு மலையேற்ற பாதைகள் உள்ளன. கொடசாத்ரியில் மலையில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்லும்போது வனத்தின் பசுமை, பல பறவைகளின் கீச்.. கீச் சத்தத்தை கேட்டபடி இனிமையான பயணம் மேற்கொள்ளலாம். மழைக்காலங்களில் கொஞ்சம் கவனமாக செல்ல வேண்டும். சமீபத்தில் பெய்த மழையால் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து கொடசாத்ரி 405 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து பஸ்சில் சென்றால் ஷிவமொக்காவின் நிட்டூர் கிராமத்தில் இறங்கி அங்கிருந்து கொடசாத்ரியை சென்றடையலாம். ரயிலில் சென்றால் உடுப்பின் கொல்லுார் மூகாம்பிகை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 20 கி.மீ., துாரம் வாடகை கார்களில் பயணம் செய்தால் கொடசாத்ரிக்கு சென்று விடலாம்.கொல்லுாரில் இருந்தும் கொடசாத்ரி மலை உச்சி வரை வாடகைக்கு ஜீப்புகள் இயக்கப்படுகின்றன.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us