Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளி உணவில் எண்ணெயை குறைக்கணும் மோடி யோசனையை ஏற்றது கர்நாடக அரசு

பள்ளி உணவில் எண்ணெயை குறைக்கணும் மோடி யோசனையை ஏற்றது கர்நாடக அரசு

பள்ளி உணவில் எண்ணெயை குறைக்கணும் மோடி யோசனையை ஏற்றது கர்நாடக அரசு

பள்ளி உணவில் எண்ணெயை குறைக்கணும் மோடி யோசனையை ஏற்றது கர்நாடக அரசு

ADDED : மார் 24, 2025 04:49 AM


Google News
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையை ஏற்று கொண்ட கர்நாடக அரசு, பள்ளிகளில் மதிய உணவில் எண்ணெய் பயன்பாட்டை குறைக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

பள்ளி சிறார்களுக்கு அளவுக்கு அதிகமான கொழுப்பு பிரச்னை, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகரிக்கிறது. சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. உயிரிழந்த உதாரணங்களும் உள்ளன. இதனால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது.

எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதும், இதற்கு முக்கிய காரணம். இதை மனதில் கொண்டு, பள்ளிகளில் சிறார்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் போது, எண்ணெய் அளவை குறைக்கும்படி மத்திய கல்விதுறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் ஆலோசனையை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில், மதிய உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் சூர்யகாந்தி எண்ணெய் அளவை 10 சதவீதம் குறைக்கும்படி, பள்ளி கல்வித்துறை கமிஷனர் திரிலோக் சந்திரா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பள்ளி சிறார்களின் ஆரோக்கியமான வாழ்க்கை தரத்தை பற்றி, ஊக்கப்படுத்த வேண்டும். அன்றாட உணவில் சமையல் எண்ணெய் அளவை குறைப்பது அவசியம். மிகவும் குறைவான எண்ணெய் பயன்படுத்தி, ஊட்டச்சத்தான உணவு தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது குறித்து, பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது கட்டாயமாகும். ஹோம் சயின்ஸ் கல்லுாரிகளின் ஊட்டச்சத்து உணவு வல்லுநர்களை வரவழைத்து, குறைவான எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கும் உணவு குறித்து, ஊழியர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

ஆரோக்கியமான உணவு நடைமுறை பற்றி, பள்ளி அளவில் வினாடி வினா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்க வேண்டும். பள்ளிகளில் உடற் பயிற்சி, யோகா, விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

பள்ளிகள் அல்லது வீடுகளில், தின்பண்டங்களை எண்ணெயில் பொறிப்பதற்கு பதில், வேக வைத்து சாப்பிடுவது நல்லது. ஜங்க் புட்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. இதில் அதிகமான கொழுப்பு இருக்கும். இத்தகைய உணவுகளை தவிர்ப்பது குறித்து, சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us