/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'பலிகடா'க்களை தேடுகிறதா சித்தராமையா அரசு? 'பலிகடா'க்களை தேடுகிறதா சித்தராமையா அரசு?
'பலிகடா'க்களை தேடுகிறதா சித்தராமையா அரசு?
'பலிகடா'க்களை தேடுகிறதா சித்தராமையா அரசு?
'பலிகடா'க்களை தேடுகிறதா சித்தராமையா அரசு?
ADDED : ஜூன் 06, 2025 11:25 PM
பெங்களூரு: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல் அசம்பாவிதத்தை அடுத்து, அரசுக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி எழுந்துள்ளதால், அதை சமாளிக்க 'பலிகடா'க்களை அரசு தேடுவதாக புகார் எழுந்துள்ளது.
உயிரிழப்பு சம்பவத்தில் போலீசாரின் அலட்சியமே காரணம்; வெற்றி கொண்டாட்டத்துக்கு அனுமதி அளித்ததால், அசம்பாவிதம் நடந்ததாகக் கூறி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவை, சஸ்பெண்ட் செய்து, மாநில அரசு உத்தரவிட்டது.
அரசின் நடவடிக்கையை, எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, மக்களும் கூட அதிருப்தி அடைந்துள்ளனர்.
தன் தவறை மூடி மறைப்பதற்காக, மூத்த அதிகாரிகளை 'பலிகடா' ஆக்குவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
தயானந்தாவுக்கு ஆதரவாக, சமூக வலைதளத்தில் 'ஐ ஸ்டேண்ட் வித் தயானந்தா' என்ற பெயரில் குரல் கொடுக்கின்றனர். வெற்றி கொண்டாட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என, போலீஸ் துறை கூறிவிட்டது.
ஆனால் 'அரசுக்கு நெருக்கடி கொடுத்து, ஆர்.சி.பி.,யினர் நிகழ்ச்சி நடத்தினர். அசம்பாவிதத்துக்கு போலீசாரை காரணம் காட்டுவது சரியல்ல' என, எதிர்க்கட்சியினரும், பொது மக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
யாரோ செய்த தவறுக்கு, வேறு யாருக்கோ தண்டனையா? போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனையை நிராகரித்து, விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கில், அப்பாவிகளை பலிகொடுத்தனர். தன்னை காப்பாற்றிக் கொள்ள, தற்போது நேர்மையான அதிகாரிகளை பலி கொடுக்க முற்பட்டது சரியல்ல. இதனால் அதிகாரிகளின் மனதிடம் குறையும்.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவை சஸ்பெண்ட் செய்தது சரியல்ல. அரசின் தெளிவின்மைக்கு இதுவே, சிறந்த எடுத்துக்காட்டு.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நான் பார்த்த நேர்மையான அதிகாரிகளில், தயானந்தாவும் ஒருவர். பழம் தின்றவர் யாரோ. தோலை வேறு ஒருவரிடம் கொடுத்து குற்றவாளி ஆக்கியுள்ளனர். தற்போது நியாயத்துக்கு மதிப்பில்லை.
- ஜக்கேஷ்,
பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,
அதிகாரிகள் தாங்களாகவே, நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கவில்லை. இது அரசியல் தீர்மானம். இந்த தீர்மானத்தை யார் எடுத்தார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். போலீஸ் அதிகாரிகளை பலியாடு ஆக்கியது ஏன். மக்களுக்காக பணியாற்றிய தயானந்தாவை, சஸ்பெண்ட் செய்தது சரியல்ல. அவரது சஸ்பெண்ட் உத்தரவை, திரும்ப பெறுங்கள்.
- ரூபேஷ் ராஜண்ணா,
கன்னட போராட்டக்காரர்