Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கனமழையால் வெள்ளக்காடானது மங்களூரு நகரம் தத்தளிப்பு! வீடு மீது மண் சரிந்து 4 பேர் உட்பட ஏழு பேர் பலி

கனமழையால் வெள்ளக்காடானது மங்களூரு நகரம் தத்தளிப்பு! வீடு மீது மண் சரிந்து 4 பேர் உட்பட ஏழு பேர் பலி

கனமழையால் வெள்ளக்காடானது மங்களூரு நகரம் தத்தளிப்பு! வீடு மீது மண் சரிந்து 4 பேர் உட்பட ஏழு பேர் பலி

கனமழையால் வெள்ளக்காடானது மங்களூரு நகரம் தத்தளிப்பு! வீடு மீது மண் சரிந்து 4 பேர் உட்பட ஏழு பேர் பலி

ADDED : மே 30, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம், நேற்று கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேபோல் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மங்களூரு நகரில் மழை கொட்டித்தீர்த்தது.

சபாநாயகர் காதரின் தொகுதியான உல்லால் கோட்டேகாரு, பிற பகுதிகளான தலப்பாடி, கின்னியா, முன்னுாரு, ஜெப்பினமுகரு, ராவ் சதுக்கம், கொப்பரஹிட்லு, மொந்தேபதவுகொடி, கல்லாப்பு, பிலார், அம்பிகாரஸ்தே, பாவூர், தொக்கோட்டு, தேரலகட்டே, கனகெரே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.

மொந்தேபதவுகொடி பகுதியில் பெய்த மழையால், மலையில் இருந்து மண் சரிந்து, காந்தப்பா என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அவரது வீடு இடிந்தது. வீட்டிற்குள் இருந்த காந்தப்பா, அவரது மனைவி பிரேமா, 58, மகன் சீதாராம், 35, மருமகள் அஸ்வினி, 32, பேரக்குழந்தைகள் ஆர்யன், 3, ஆருஸ், 2, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

கனமழை பெய்து கொண்டு இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டது, பக்கத்து வீட்டினருக்குக் கூட தெரியவில்லை. நேற்று காலை எழுந்து பார்த்தபோது தான் நிலச்சரிவில் வீடு இடிந்தது தெரிந்தது.

தகவல் அறிந்ததும் தட்சிண கன்னடா மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு சென்றனர். மழைக்கு மத்தியிலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் களம் இறங்கினர்.

காந்தப்பாவும், சீதாராமும் பலத்த காயத்துடன் முதலில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் பிரேமா பிணமாக மீட்கப்பட்டார். அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததை, மீட்புப்படையினர் கண்டனர்.

அஸ்வினி மீது சுவர் இடிந்து விழுந்திருந்தது. தன் குழந்தைகளை காக்கும் வகையில் சுவரின் மொத்த பாரத்தையும் தாங்கிக் கொண்டு இருந்தார். முதலில் குழந்தை ஆர்யன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது.

இரண்டு வயது குழந்தை ஆருஸும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, வழியிலேயே இறந்தது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட அஸ்வினிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

'நான் இறந்தாலும் பரவாயில்லை, என் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள்' என உருக்கமாக, மீட்பு குழுவினருடன் அஸ்வினி கூறினார். இரண்டு குழந்தைகளும் இறந்தது பற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதுபோல கனகெரே அருகே பெல்லுகிராமா கிராமத்திலும் மண் சரிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் கூரை இடிந்து விழுந்ததில் நவுசாத் என்பவர் மகள் நயிமா, 10, இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.

கனமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கையை மீறி மங்களூரு தொட்டபைங்கெரே கடல் பகுதியில் மீனவர்களான யஷ்வந்த், கமலாக் ஷா ஆகியோர் நேற்று மதியம் நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர்.

ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில், இரண்டு பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெல்தங்கடி மெஸ்காமில் லைன்மேன் ஆக வேலை செய்து வந்த விஜேஷ்குமார், 35, என்பவர் நேற்று மின்மாற்றியில் பழுதை நீக்கிக் கொண்டு இருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

கொட்டித் தீர்த்த கனமழையால் மங்களூரு நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியது. ஜெப்பினமுகரு, கோட்டேகாரு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கி இருப்பதால், மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

மங்களூரில் இருந்து கேரளாவின் சொர்ணுார் செல்லும் ரயில் பாதையில் மரமிகட்டே என்ற இடத்தில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து, தண்டவாளம் மீது விழுந்தது. அந்த நேரத்தில் ரயில் வராததால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

மின்கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் விழுந்தன. மீட்பு ரயில் அங்கு வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்தன. பக்கத்தில் இருந்த தண்டவாளத்தின் வழியே ரயில் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டன.

கனமழை எதிரொலியாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அங்கன்வாடிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் காலை 8:30 மணியில் இருந்து நேற்று காலை 8:30 மணி வரை அதிகபட்சமாக மங்களூரின் கோட்டேகாருவில் 31.3 செ.மீ., மழை பெய்துள்ளது.

தலப்பாடியில் 27.75 செ.மீ., கின்னியாவில் 27.3 செ.மீ., முன்னுாரில் 24.95 செ.மீ., மழை பெய்துள்ளது.

இன்றும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us