Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு மேம்பாட்டு ஆணைய மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

மைசூரு மேம்பாட்டு ஆணைய மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

மைசூரு மேம்பாட்டு ஆணைய மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

மைசூரு மேம்பாட்டு ஆணைய மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

ADDED : மே 17, 2025 11:14 PM


Google News
பெங்களூரு: 'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம், இனி மைசூரு மேம்பாட்டு ஆணையம் என, அழைக்கப்படும். இதுதொடர்பான மசோதாவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

முதல்வர் சித்தராமையா குடும்பத்தினருக்கு, 'முடா'வில் 14 வீட்டுமனைகள் வழங்கிய முறைகேடு நடந்து, சர்ச்சையில் சிக்கியது. பலருக்கும் விதிமீறலாக மனை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே 'முடா'வில் மாற்றங்கள் கொண்டு வரவும், நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், மைசூரு மேம்பாட்டு ஆணையம் மசோதா - 2024ஐ அரசு உருவாக்கியது.

சட்டசபை, மேல்சபையில் அங்கீகாரம் பெற்று, கவர்னரின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பியது. மசோதா தொடர்பாக கவர்னர் சில சந்தேகங்களை எழுப்பினார்.

முடா மனை சர்ச்சை எழுந்துள்ள நிலையில், புதிய மசோதா கொண்டு வருவது, பொது மக்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பும் என, கவர்னர் கருத்து தெரிவித்தார்.

இதற்கு அரசு பல கட்டங்களில் தெளிவான விளக்கம் அளித்த பின், மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கையெழுத்திட்டார்.

எனவே இனி முடா, எம்.டி.ஏ., எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் என்ற பெயரில் செயல்படும். அரசியல் தலையீடும் இருக்காது.

இதுகுறித்து, ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

புதிதாக அமலுக்கு வரும் எம்.டி.ஏ.,வில் ஒரு தலைவர், கணக்கு தணிக்கையில் அனுபவம் உள்ள அதிகாரி, தலைமை பொறியாளர், நகர மற்றும் ஊரக திட்டப்பிரிவு இயக்குநர், மைசூரு மாநகராட்சி கமிஷனர் உட்பட, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பர்.

பெங்களூரின் பி.டி.ஏ., போன்று, எம்.டி.ஏ.,வும் செயல்படும். மைசூரு பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்புக்கு ஆணையம் அமைப்பது, நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது உட்பட, பல பொறுப்புகளை எம்.டி.ஏ., நிர்வகிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us