/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'நவீன மைசூரு' திட்டம் செயல்படுத்த அரசு தீவிரம் 'நவீன மைசூரு' திட்டம் செயல்படுத்த அரசு தீவிரம்
'நவீன மைசூரு' திட்டம் செயல்படுத்த அரசு தீவிரம்
'நவீன மைசூரு' திட்டம் செயல்படுத்த அரசு தீவிரம்
'நவீன மைசூரு' திட்டம் செயல்படுத்த அரசு தீவிரம்
ADDED : ஜூன் 13, 2025 06:59 AM

பெங்களூரு: ''நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் கலாசார நகரமான மைசூரை, 'நவீன மைசூராக' மாற்றும் திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது,'' என, மாநில நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் பைரதி சுரேஷ், ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு பின், அவர் அளித்த பேட்டி:
தலைநகர் பெங்களூரு போன்று, மைசூரு நகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. எனவே, நகரை சுற்றி உள்ள பகுதிகளையும், மைசூருக்குள் கொண்டு வந்து, ஒட்டுமொத்தமாக மேம்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 'நவீன மைசூரு' திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மைசூரில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், வீட்டு வசதி திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் பின்னணியில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, விரிவான திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தி உள்ளது.
'நவீன மைசூரு' திட்டத்துக்கு, வணிக மைசூரு, திறமையான மைசூரு, வசதியான மைசூரு, சுற்றுலா மைசூரு, போக்குவரத்து மைசூரு ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் கருப்பொருளாக கொண்டு செயல்படுத்தப்படும்.
'வணிக மைசூரு' திட்டப்படி, ஒட்டுமொத்த விரிவான மேம்பாட்டை வலியுறுத்தும் வகையில், அதிநவீன உற்பத்தி மையம் நிறுவப்படும்.
'திறமையான மைசூரு' திட்டப்படி திறன் பயிற்சி, திறன் சார்ந்த வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். திறமையான மைசூரு மண்டலத்தை உருவாக்கி, தொழில்முனைவோர் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
'வசதியான மைசூரு' என்ற திட்டப்படி, விரிவான தொழில்நுட்ப நகரம் நிர்மாணிக்கப்படும். 'சுற்றுலா மைசூரு' என்பதில், விரிவான சுகாதாரம், நல்வாழ்வு, மறுவாழ்வு மையம் துவங்கப்படும். 'போக்குவரத்து மைசூரு' திட்டப்படி, மைசூரில் விரைவு மெட்ரோ திட்டம் முன்மொழியப்பட்டு உள்ளது.
இத்திட்டங்களை பொது - தனியார் கூட்டுடன் செயல்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு நிதி சுமை இருக்காது. முதலீட்டில், பெங்களூருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் மைசூரு உள்ளது. இங்கு செய்யப்படும் முதலீடுகள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், மைசூரில் முதலீடு செய்வது பிடிக்கும். இதன் மூலம் தொழில் முனைவோரை ஈர்க்க திட்டம் வகுக்கப்படும்.
முதலீட்டாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல், வணிக நிறுவனங்களை அமைக்க விரைந்து நிலம் ஒதுக்கப்படும். உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.