/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 30 ஆண்டுக்கு முன் ரூ.500 லஞ்சம் கிராம 'மாஜி' கணக்காளருக்கு சிறை 30 ஆண்டுக்கு முன் ரூ.500 லஞ்சம் கிராம 'மாஜி' கணக்காளருக்கு சிறை
30 ஆண்டுக்கு முன் ரூ.500 லஞ்சம் கிராம 'மாஜி' கணக்காளருக்கு சிறை
30 ஆண்டுக்கு முன் ரூ.500 லஞ்சம் கிராம 'மாஜி' கணக்காளருக்கு சிறை
30 ஆண்டுக்கு முன் ரூ.500 லஞ்சம் கிராம 'மாஜி' கணக்காளருக்கு சிறை
ADDED : ஜூன் 19, 2025 11:28 PM
பெங்களூரு: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், கிராம கணக்காளருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
பெலகாவியின் கடோலி கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமண் ருக்கன்னா கடாம்பளே. இவர், 1995ல் தன் சகோதரர்களுக்கு நிலத்தை அளந்து பங்கிட்டு கொடுக்கும்படி, கிராம பஞ்சாயத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், அளவிட்டு தருவதாக கிராம கணக்காளர் நாகேஷ் தொன்டு ஷிவங்கேகர் கேட்டார்.
இதுகுறித்து, பெலகாவி லோக் ஆயுக்தாவில் விவசாயி லட்சுமண் புகார் அளித்தார். அதிகாரிகள் கூறியபடி, 500 ரூபாயை கிராம கணக்காளர் நாகேஷிடம் லட்சுமண் கொடுத்தார்.
அப்போது திடீர் சோதனை நடத்திய லோக் ஆயுக்தா அதிகாரிகள், அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
விசாரணையை முடித்த அதிகாரிகள், பெலகாவி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நாகேஷ் லஞ்சம் வாங்கியது உறுதியானதால், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, 2006 ஜூன் 14ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாகேஷ் மனுத் தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், அவரை நிரபராதி என, 2012 மார்ச் 9ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லோக் ஆயுக்தா முறையிட்டது.
மனு தொடர்பாக, ஆண்டுக்கணக்கில் விசாரணை நடந்தது. நடப்பாண்டு ஏப்ரல் 16ம் தேதி, பெலகாவி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அவரை கைது செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி நேற்று முன்தினம், அவரை போலீசார் கைது செய்தனர். பெலகாவியின் ஹிண்டல்கா சிறையில் அடைத்தனர்.
தற்போது நாகேஷுக்கு 70 வயதாகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். 30 ஆண்டுகளுக்கு முன்பு, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்கு, இப்போது சிறை தண்டனை அனுபவிக்கிறார்.