Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் குளறுபடி கூட்டமைப்பு தலைவர் போராட்ட எச்சரிக்கை

சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் குளறுபடி கூட்டமைப்பு தலைவர் போராட்ட எச்சரிக்கை

சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் குளறுபடி கூட்டமைப்பு தலைவர் போராட்ட எச்சரிக்கை

சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் குளறுபடி கூட்டமைப்பு தலைவர் போராட்ட எச்சரிக்கை

ADDED : மே 28, 2025 12:15 AM


Google News
பெங்களூரு : ''சாலையோர வியாபாரிகள் குறித்து, மாநகராட்சி முறையாக கணக்கெடுக்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசை கண்டித்து வியாபாரிகள் ஒன்றிணைந்து போராடுவோம்,'' என, சாலையோர வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் பாபு தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு நகரில் சாலையோரம் பூ, பழம், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை, வியாபாரிகள் விற்று வருகின்றனர்.

சாலையோரம் வியாபாரம் செய்ய மாநகராட்சியில் அதிகாரபூர்வமாக, பலர் பதிவு செய்து உள்ளனர். ஆனால் பெரும்பாலோனார் எந்த பதிவும் செய்யாமல் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளால், வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் நிலவுகிறது.

இதுதொடர்பாக துணை முதல்வர் சிவகுமார், சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், 'பெங்களூரில் சாலையோரம் கடைகள் போட்டு பொருட்கள் விற்பனை செய்ய, மாநகராட்சியில் 27,665 வியாபாரிகள் மட்டுமே பதிவு செய்து உள்ளனர். இதனால் அவர்களால் மட்டுமே, சாலையோர வணிகத்தில் ஈடுபட முடியும்.

'இவர்கள் தள்ளுவண்டியில் பொருட்களை விற்பனை செய்யலாம். முதல் கட்டமாக 3,755 பேருக்கு தள்ளுவண்டிகள் வழங்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது. தள்ளுவண்டிகள் கிடைத்ததும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில், விற்பனையை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் பாபு கூறியதாவது:

பெங்களூரு நகரில் உள்ள சாலையோர வியாபாரிகள் குறித்து மாநகராட்சி முறையாக கணக்கெடுக்கவில்லை.

சாலையோரத்தில் பொருட்கள் விற்பனை செய்ய 27,665 பேர் மட்டும் பதிவு செய்து உள்ளனர் என்று சொல்வதை ஏற்க முடியாது.

பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர் கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

சாலையோர வியாபாரிகள் குறித்து, மாநகராட்சி முறையாக கணக்கெடுக்க வேண்டும். நிறைய வியாபாரிகளை கணக்கில் எடுக்கவில்லை. வெறும் 27,665 பேருக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதி என்றால், மற்ற வியாபாரிகள் குடும்பம் நடுத்தெருவிலா நிற்கும்.

சாலையோர வியாபாரிகள் குறித்து துணை முதல்வருக்கு தவறான தகவல் கிடைத்து இருக்கலாம். வியாபாரிகளுக்கு நிறைய கோரிக்கை உள்ளது.

அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு எதிராக வியாபாரிகள் ஒன்றிணைந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us