ADDED : மே 20, 2025 11:52 PM
தங்கவயல் : தங்கவயல் ஆண்டர்சன் பேட்டையை சேர்ந்தவர் மகி என்ற மகேஷ், 40. இவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளியே வந்தவர். மீண்டும் நீதிமன்ற விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். ஆண்டர்சன்பேட்டை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தோல்வி அடைந்த அவரது மகள் காவ்யா, 15, நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எப்படியும் மகளின் ஈம சடங்கை நிறைவேற்ற தந்தை மகி வருவார் என போலீசார் காத்திருந்தனர்.
நேற்று மாலை தனது மகள் ஈம சடங்கை நிறைவேற்ற வந்தார். ஆண்டர்சன்பேட்டை போலீசார், அங்கேயே கைது செய்தனர். அவரை நேற்று தங்கவயல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
மகளின் ஈமசடங்கு நிறைவேற்ற அனுமதிக்காமல் போலீசார் கைது செய்தது பற்றி அவரது வக்கீல் ஜோதிபாசு வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதி, அவரின் பிடிவாரன்டை ரத்து செய்து ஜாமினில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஜாமினில் விடுவிக்கப்பட்டு, மகளின் இறுதி சடங்கை நிறைவேற்றினார்.