/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளிகளில் சுற்றுச்சூழல், காலநிலை கிளப்கள் பள்ளிகளில் சுற்றுச்சூழல், காலநிலை கிளப்கள்
பள்ளிகளில் சுற்றுச்சூழல், காலநிலை கிளப்கள்
பள்ளிகளில் சுற்றுச்சூழல், காலநிலை கிளப்கள்
பள்ளிகளில் சுற்றுச்சூழல், காலநிலை கிளப்கள்
ADDED : ஜூன் 17, 2025 11:05 PM

பெங்களூரு: ''அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல், காலநிலை கிளப்கள் அமைப்பதை கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
மாநில மாசு கட்டுப்பாட்டு ஆணையம் சார்பில் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று, உலக சுற்றுச்சூழல் தின மாரத்தான் கொண்டாடப்பட்டது. துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
கர்நாடகாவில் அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல், காலநிலை கிளப்கள் அமைப்பதை கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் 25 மாணவர்கள் இந்த கிளப்பில் இருப்பர்.
இதனால், இயற்கையை பாதுகாப்பது, அதற்காக போராடுவது குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும். ஒவ்வொரு பள்ளியும், மரக்கன்று நடும் பகுதியை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.
இயற்கையும், சுத்தமும் தான் எங்களின் அரசின் குறிக்கோள். அடுத்த தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. கர்நாடகாவின் மிகப்பெரிய சொத்து இயற்கை தான்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை, நாம் முற்றிலுமாக நிறுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரும் மரக்கன்று நட வேண்டும். ஏற்கனவே, 50 ஆயிரம் மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு புதுடில்லி, ஆமதாபாத் சென்றிருந்தேன். அங்கு 49 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கொளுத்தியது. ஆனால் பெங்களூரில் 22 - 23 டிகிரி செல்ஷியஸ் தான் உள்ளது. இது தான் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பேசியதாவது:
இயற்கை நமக்கு அளித்த அனைத்து வளங்களையும் நியாயமான முறையில் பயன்படுத்துவது காலத்தின் தேவை. நம் முன்னோர்கள், இயற்கை வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்தினர். ஆனால் இன்று, நாம் ஆடம்பர வாழ்க்கைக்காக, வளங்களை அதிகமாக பயன்படுத்துகிறோம்; சுற்றுச்சூழல் அழிக்கப்படுகிறது.
உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகும். மரங்கள், காடுகள், நமது வாழ்க்கை முறை அழிக்கப்படுவதே இதற்கு காரணம். அனைவரும் மரங்களை நட்டு, பசுமை அதிகரித்தால், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தணிக்க முடியும்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்களுக்கு, மத்திய அரசு தடை செய்துள்ளது. மாநில அரசும், இத்தகைய உத்தரவிட்டும், பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. இத்தகைய பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று நாம் அனைவரும் சபதம் எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து, விதான் சவுதாவின் கிழக்கு வாசலில் இருந்து அம்பேத்கர் தெரு, ராஜ்பவன் சாலை, சாளுக்கியா சதுக்கம், பசவேஸ்வரா சதுக்கம், தேவராஜ் அர்ஸ் சாலை, விதான் சவுதா நுழைவு வாயில் - 1, விதான் சவுதா மேற்கு பக்கம், விதான் சவுதா கிழக்கு வாயில் வரை மாணவர்களுடன் சிவகுமார் ஊர்வலத்தில் நடந்தார்.
அதே வேளையில், சைக்கிளில் சென்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.