/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.50 கோடி மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு ரூ.50 கோடி மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு
ரூ.50 கோடி மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு
ரூ.50 கோடி மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு
ரூ.50 கோடி மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு
ADDED : ஜூன் 27, 2025 06:57 AM

பெங்களூரு:சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, பெங்களூரில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
பெங்களூரின், கன்டீரவா விளையாட்டு அரங்கில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில், நேற்று காலை சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அழிக்க, அமைச்சர் பரமேஸ்வர் ஒப்புதல் அளித்தார். அதன்பின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் அழிக்கப்பட்டது. 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல், போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
“போதைப் பொருளுக்கு எதிராக செயல்படுவோம்,” என, அமைச்சர் பரமேஸ்வர் உறுதிமொழி வாசித்தார். காணொளி காட்சி வழியாக 55,000 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் பரமேஸ்வர் பேசியதாவது:
இதற்கு முன்பு பஞ்சாபில், போதைப்பொருள் தொல்லை அதிகம் இருந்தது. அம்மாநிலம் அவமதிப்புக்கு ஆளானது. அதேபோன்ற களங்கம் கர்நாடகா மற்றும் பெங்களூருக்கு ஏற்படக் கூடாது என்பதால், மாநில அரசு போதைப் பொருட்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க துவங்கியது.
கர்நாடகாவை போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக்க, முதல்வர் சித்தராமையா உறுதிபூண்டுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்துவோர், விற்போர், கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்படுகிறது.
போலீஸ் அதிகாரிகள், அவரவர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று, 6.5 லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
பள்ளி, கல்லுாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் தகவல் சேகரிக்கின்றனர். இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா, சிந்தடிக் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப பொருட்கள் இணைப்பு நெட்வொர்க்கை துண்டிக்க, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் சப்ளை செய்வோர் பற்றிய தகவல் சேகரித்து, போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்து, போதைப் பொருள் விற்று வந்த 200 பேர், நாடு கடத்தப்பட்டனர். நேற்று வெளியிடப்பட்ட, 'கியூ.ஆர்., கோட்' மூலம், மாணவர்கள், பொதுமக்கள் போதைப் பொருள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
மாணவர்கள், போலீசாருடன் ஒத்துழைத்து, போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும். மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் உள்ளது. இதை போதைப் பொருள் பழக்கத்தால் பாழாக்கக் கூடாது. உங்களின் எதிர்காலம், உங்கள் கையில் உள்ளது. எச்சரிக்கையுடன் இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.