ADDED : மே 14, 2025 12:39 AM
* நீரில் மூழ்கி 2 பேர் பலி
ஹாவேரி, ஹனகல்லின் சிக்காந்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் பசவராஜ் படகன்னனவர், 38, மாலதேஷ் குருபரா, 19. இவர்கள் நேற்று மதியம் கிராமத்தின் ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது, கால் தவறி நீரில் விழுந்து உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், ஏரியில் தேடியதில் மாலதேஷின் உடல் கிடைத்தது. மற்றொருவரை தேடுகின்றனர்.
* லஞ்ச பி.டி.ஓ., கைது
ஹாவேரி, சவனுாரின் தக்கிஹள்ளி கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுபவர் அசோக். இவர் பஞ்சாயத்து சார்பில் கிட்டங்கி கட்டும் பணிகள் நடத்திய ஒப்பந்ததாரருக்கு 1.60 லட்சம் ரூபாய் பில் தொகை வழங்க, 80,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். நேற்று காலை ஹூப்பள்ளி பஸ் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில், முதற்கட்டமாக 50,000 ரூபாய் பெறும் போது, லோக் ஆயுக்தாவினர், பி.டி.ஓ., அசோக்கை கைது செய்தனர்.
* மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி
பீதர், ஹுலசூரின் தோகலுார் கிராமத்தில் வசித்தவர் பல்லவி, 15. இவரது பெற்றோர் புதிதாக வீடு கட்டுகின்றனர். சிமென்ட் பூச்சுக்கு தண்ணீர் ஊற்றுவது வழக்கம். பல்லவி நேற்று காலை தண்ணீர் ஊற்ற மோட்டாரை ஆன் செய்யும் போது, மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார்.
* பசுவின் மடி அறுப்பு
சிக்கமகளூரு, கடூரின் தம்மிஹள்ளி கிராமத்தில் வசிக்கும் சேகரப்பா, பசுக்கள் வளர்க்கிறார். நேற்று அதிகாலை மர்ம நபர்கள், பசுக்களை கடத்த முற்பட்டனர். முடியாததால் ஒரு பசுவின் மடி காம்புகளை அறுத்து விட்டு தப்பியோடினர். ரத்தப்போக்கு ஏற்பட்டு பசு இறந்தது. மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
**