Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஹேமாவதி கால்வாய் திட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்., - எம்.எல்.ஏ., கைது

ஹேமாவதி கால்வாய் திட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்., - எம்.எல்.ஏ., கைது

ஹேமாவதி கால்வாய் திட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்., - எம்.எல்.ஏ., கைது

ஹேமாவதி கால்வாய் திட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்., - எம்.எல்.ஏ., கைது

ADDED : ஜூன் 06, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
ராம்நகர்: ஹேமாவதி கால்வாய் திட்டத்திற்கு ஆதரவாக, போலீசார் தடையை மீறி பேரணி நடத்திய, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஹாசன் கொரூரில் உள்ள ஹேமாவதி அணையில் இருந்து, கால்வாய் வழியாக துமகூரு மாவட்டத்திற்கு ஆண்டிற்கு 24 டி.எம்.சி., தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீரின் ஒரு பகுதியை பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் மாகடிக்கு கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

போராட்டம்


இதற்காக துமகூரின் குப்பி பங்காபுரா கிராமத்தில் குழாய்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துமகூரு மாவட்ட அரசியல்வாதிகள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்.

கடந்த 31ம் தேதி சாலையில் டயர்களுக்கு தீ வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குழாய்களையும் சேதப்படுத்தினர். போராட்டத்தை துாண்டிவிட்டதாக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ் கவுடா, ஜோதி கணேஷ், கிருஷ்ணப்பா மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவானது.

இந்நிலையில் ஹேமாவதி தண்ணீரை மாகடி கொண்டு வரும் திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்புத் தெரிவிக்கும் துமகூரு மக்களை கண்டித்தும், மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தலைமையில் நேற்று மாகடியில் போராட்டம் நடந்தது.

கட்சி பேதமின்றி அனைத்து கட்சியினர், விவசாயிகள், பல்வேறு அமைப்புகள் பங்கேற்றனர்.

நெரிசல்


'எங்கள் தண்ணீர்... எங்கள் உரிமை...' என்று கோஷம் எழுப்பினர். பின், மாகடி டவுனில் இருந்து தலகெரே சோதனை சாவடி வரை பேரணியாக சென்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது மாகடி டி.எஸ்.பி., பிரவீன்குமார், எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாவிடம் சென்று, “10 நிமிடங்களில் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்,” என்றார்.

டி.எஸ்.பி., கூறியதை கேட்காமல் எம்.எல்.ஏ., தலைமையில் தொடர்ந்து பேரணி நடந்தது. இதனால் வேறு வழியின்றி எம்.எல்.ஏ.,வையும், பேரணியில் கலந்து கொண்டவர்களையும் போலீசார் கைது செய்து, வேன்களில் ஏற்றி கூடூர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பின், பாலகிருஷ்ணா அளித்த பேட்டி:

எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீருக்காக போராட்டத்தை துவக்கி உள்ளோம். இந்த பிரச்னையை தீர்க்க அரசுக்கு ஒரு வாரம் கெடு அளிக்கிறேன். பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால், மாகடியில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை நடத்துவோம்.

எங்கள் போராட்டம் தீவிரம் அடைந்தால், வன்முறையாக மாறும். இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசு தான் பொறுப்பு.

தீர்ப்பாயம்


ஹேமாவதி தண்ணீர் பிரச்னையை தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். அணையில் எவ்வளவு தண்ணீர் சேமிக்கப்படுகிறது; எவ்வளவு திறந்து விடப்படுகிறது என்று தெரிவிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் மாகடி மக்களும் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத்துக்கு ஓட்டுப் போட்டனர்.

இதை மறந்து மாகடிக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகிறார். இதை நினைத்து அவர் வெட்கப்பட வேண்டும்.

பா.ஜ., - எம்.எல்.சி., ரவிக்கும், மாகடிக்கும் என்ன சம்பந்தம்? எங்கள் ஊர் விஷயத்தில் தலையிடுவதை அவர் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us