Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சினிகடலை

சினிகடலை

சினிகடலை

சினிகடலை

ADDED : செப் 13, 2025 11:16 PM


Google News
Latest Tamil News

நாயக்கர்களின் சரித்திரம்

'சாமய்யா சன் ஆப் ராமாச்சாரி' திரைப்பட டிரெய்லர், சமீபத்தில் வெளியானது. ராதா கிருஷ்ண பல்லக்கி, இந்த படத்தை இயக்குவதுடன், தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளார். நடிகர் ஜெயஸ்ரீராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது மனைவியாக பிரேமா கவுடா, சாமய்யாவாக பிரதீப் சாஸ்திரி, மகளாக சைத்ரா நடித்துள்ளனர். சித்ரதுர்காவின் நாயக்கர்களின் சரித்திரம் கதையில் இடம் பெற்றதால், சித்ரதுர்கா கோட்டை சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். பெங்களூரு, பாதாமி, ஐஹொளே உட்பட, வரலாற்று பிரசித்தி பெற்ற இடங்களில், படப்பிடிப்பு நடந்துள்ளது. செப்டம்பர் 18ல் திரையிட படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர்.

'ரிஸ்க்' எடுத்த நடிகை

அமைச்சர் செலுவராயசாமியின் மகன் சச்சின் மற்றும் நடிகை சங்கீதா பட் நடிக்கும் 'கமல் ஸ்ரீதேவி' திரைப்பட டிரெய்லர், சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படத்தில் சங்கீதா பட் ஸ்ரீதேவி என்ற விலைமாது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் திடீரென கொலை செய்யப்படுகிறார். கொலையை சுற்றிலும் கதை பின்னப்பட்டுள்ளது. படத்தில் பல திருப்பங்கள் இருப்பது, டிரெய்லர் மூலம் தெரிந்துள்ளது. பொதுவாக விலைமாதுவாக நடிக்க நடிகையர் தயங்குவர். சங்கீதா பட் 'ரிஸ்க்' எடுத்து நடித்துள்ளார். அவரது நடிப்பு திறனை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.

இடம் தேடும் குழு

'திம்சோல்' என்ற திரைப்படம் தயாராகிறது. படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தை துாண்டியது. திம்சோல் என்பது, கடலோர பகுதிகளில் சிவராத்திரி நேரத்தில் நடக்கும் வழிபாடாகும். இதை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. ரதாகிரண் மற்றும் சிவானி ராய் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். ரங்காயணா ரகு, மானசி சுதீர், சின்னத்திரை நடிகை அம்ருதா உட்பட, பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பை துவங்க படக்குழுவினர் தயாராகின்றனர். மாறுபட்ட லொகேஷனை தேடுகின்றனர்.

'வில்லி' மனைவியர்

சில திரைப்படங்கள் தொடக்கம் முதல் இறுதி வரை, ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும். 'ஜம்பு சர்க்கஸ்' திரைப்படமும் அதே போன்று, கதையை போரடிக்காமல் கொண்டு சென்றுள்ளனர். தேவையற்ற காட்சிகள் இல்லையாம். இரண்டு நண்பர்கள், கல்லுாரியில் ஒன்றாக படித்து, ஒரே மண்டபத்தில், ஒரே நாளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரே ஏரியாவில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரே நாளில் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இவர்களின் நட்பு, மனைவியருக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை எதிரிகளை போன்று வளர்க்கின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே கதையாகும். பிரவீன் தேஜ், அஞ்சலி ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர்.

மாறுபட்ட

கதாபாத்திரம்

நகைச்சுவை நடிகர் சிக்கண்ணா, நாயகனாக நடித்த 'உபாத்யக்ஷா' திரைப்படம் வெற்றி பெற்றதால், அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நாயகன் கதாபாத்திரங்களே தேடி வருகின்றன. கதைகளை அதிக கவனத்துடன் தேர்வு செய்து கொள்கிறார். சோமசேகர் தயாரிக்கும் 'லட்சுமி புத்ரா' என்ற படத்தில், சிக்கண்ணா நாயகனாக தேர்வு செய்யப்பட்டார், அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மாறுபட்ட கதை கொண்டதாகும். இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில், சிக்கண்ணா நடிக்கிறாராம்.

நடிகை

நம்பிக்கை

நடிகை ருக்மிணி வசந்த், 'சப்த சாகரதச்சே எல்லோ' திரைப்படம் மூலம், திரையுலகில் நுழைந்தவர். அடுத்தடுத்து தெலுங்கு, தமிழில் பட வாய்ப்புகள் பெறுகிறார். ஆனால் அவர் நடித்த சில படங்கள் நன்றாக ஓடாமல், பெட்டிக்குள் சுருண்டன. இதனால் அவர் வருத்தத்தில் உள்ளார். தற்போது தான் நடித்துள்ள 'காந்தாரா சேப்டர் 1' திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அக்டோபர் 2ல் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. நடிகர் யஷ்ஷுடன் ருக்மிணி வசந்த் நடிக்கும், 'டாக்சிக்' அடுத்தாண்டு இந்த படம் திரைக்கு வரவுள்ளன. 'இவை நன்றாக ஓடும்' என, நம்பிக்கையில் ருக்மிணி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us