/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் சித்தராமையா ஆலோசனை பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் சித்தராமையா ஆலோசனை
பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் சித்தராமையா ஆலோசனை
பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் சித்தராமையா ஆலோசனை
பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் சித்தராமையா ஆலோசனை
ADDED : மார் 25, 2025 01:10 AM

பெங்களூரு : பால் விலையை உயர்த்துவது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்வதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
பால் கூட்டுறவு சங்கங்கள், நஷ்டத்தில் இயங்குகின்றன. நிர்வகிப்பு செலவும் அதிகரிக்கிறது. எனவே பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தும்படி, பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கங்கள், மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, தன் காவிரி இல்லத்தில், நேற்று மாலை முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டுறவுத்துறை, கால்நடைத்துறை அமைச்சர்கள், கே.எம்.எப்., தலைவர், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிர்வாக செலவுகள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டி, பால் விலையை உயர்த்த அனுமதி அளிக்கும்படி பால் கூட்டுறவுகள் கோரின. இதை ஏற்காத முதல்வர்,“பால் விலை உயர்வு குறித்து, தற்போது முடிவு செய்ய முடியாது. அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசித்து, முடிவு செய்யப்படும்,” என கூறிவிட்டார்.
கூட்டம் குறித்து, தன் 'எக்ஸ்' பக்கத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவு:
கே.எம்.எப்., தலைவர், மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், நிர்வாக இயக்குனர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினேன். பால் கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். பால் விலை உயர்வு குறித்து, சில உத்தரவுகளை பிறப்பித்தேன்.
பால் விலையை உயர்த்தும்படி கூட்டுறவு சங்கங்கள் வலியுறுத்துகின்றன. பால் கூட்டுறவு சங்கங்களின் செலவை குறைக்க வேண்டும். பொருளாதார ஒழுங்கை பின்பற்ற வேண்டும்.
தேவைக்கும் அதிகமான ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கக் கூடாது என, உத்தரவிட்டேன். தேவையற்ற செலவுகளால், சில பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டம் அடைகின்றன.
அடுத்த மூன்று மாதங்களில், நிர்வாக செலவை 2.5 சதவீதம் குறைக்க வேண்டும். வேறு மாநிலங்களுடன் ஒப்பிட்டால், நம் மாநிலத்தில் பால் விலை குறைவாக இருப்பது உண்மைதான். பால் விலையை அதிகரித்தால், உற்பத்தி அதிகரிக்கும். இதன் லாபம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது, அரசின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.