Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்!: இதுவரை 83 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு

நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்!: இதுவரை 83 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு

நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்!: இதுவரை 83 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு

நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்!: இதுவரை 83 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு

ADDED : மே 14, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு, மே 1௫- “கர்நாடகாவில் செயல்படுத்தப்படும் தன்னுடைய திட்டங்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு தொடர்ந்து தாமதம் செய்கிறது. கடந்த நிதியாண்டு முடிந்த நிலையில் மொத்தமே 83 சதவீதம் நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்,” என, அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா கவலை தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களைப் போல கர்நாடகாவிலும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிதித்திட்டங்களை நிறைவேற்ற வழங்க வேண்டிய நிதி, குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படவில்லை எனவும், ஏராளமான தொகை நிலுவையில் உள்ளதாகவும் மாநில காங்கிரஸ் அரசு வட்டாரங்கள் குறை கூறி வருகின்றன.

இதுதொடர்பாக நேற்று, மாநில அளவிலான திஷா சமிதி எனும் மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், விதான் சவுதா மாநாட்டு மண்டபத்தில் நடந்தது.

முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாநில தலைமைச் செயலர் ஷாலினி மற்றும் மூத்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதித்தொகையை எப்படி வாங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டாலும், எப்படியாவது மத்திய அரசிடமிருந்து நிதியை பெற வேண்டும்; அதற்கான வழிகளை கூறுமாறு அதிகாரிகளிடம் முதல்வர் சித்தராமையா கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்துக்கு பின், அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசின் திட்டங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி சரியாக வழங்கப்படவில்லை. பிரதமரின் பெயரை கொண்டுள்ள திட்டங்களுக்கு கூட மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை.

இதுதொடர்பாக பிரதமர், மத்திய அமைச்சர்களுக்கு பல முறை கடிதம் எழுதி உள்ளேன். ஆனால், பதில் எதுவும் வரவில்லை.

மாநிலத்தில் மத்திய நிதியுதவியுடன் செயல்படும் 67 திட்டங்கள் உள்ளன. அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில், மாநில அரசின் பங்கு, 50:50, 60:40, 70:30 என்ற விகிதத்தில் திட்டங்களை பொருத்து அமையும்.

கர்நாடகாவில் மத்திய அரசின் திட்டங்களுக்காக மொத்தம் 46,859 கோடி ரூபாய் தேவைப்படும். மத்திய அரசு 22,758 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.

ஆனால், கடந்த நிதியாண்டில் வெறும் 18,561 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 4,100 கோடிக்கு ரூபாய்க்கு மேலான நிதி விடுவிக்கப்படவில்லை.

மொத்தம் 83 சதவீதம் மட்டுமே நிதி வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் தாமதமாகவே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, மாநில அரசின் நிதியில் இருந்தே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். எனவே, மத்திய அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் நிதியை வழங்க வேண்டும். மாநிலத்திலிருந்து 4.5 லட்சம் கோடி வரி செலுத்தப்படுகிறது. ஆனாலும், மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது.

இதுகுறித்து, இரண்டு முறை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தும் பேசிவிட்டேன்; ஆனால் பலனில்லை.

எனவே, லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நிதியை கொண்டு வர தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். அது அவர்களுடைய கடமை. இதிலிருந்து தப்பிக்க நினைக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us