Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பொய் செய்தி பரப்பியதாக மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மீது வழக்கு

பொய் செய்தி பரப்பியதாக மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மீது வழக்கு

பொய் செய்தி பரப்பியதாக மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மீது வழக்கு

பொய் செய்தி பரப்பியதாக மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மீது வழக்கு

ADDED : செப் 01, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
தட்சிண கன்னடா : தர்மஸ்தலா விவகாரம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பியதாக, மகேஷ் திம்மரோடி, அவரது ஆதரவாளர் கிரிஷ் மட்டன்னவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த, மாண்டியா சிக்கப்பள்ளியின் சின்னையாவை, எஸ்.ஐ.டி.,யினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை பின்னால் இருந்து இயக்கியது ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே தலைவர் மகேஷ் திம்மரோடி, அவரது நெருங்கிய ஆதரவாளர் கிரிஷ் மட்டன்னவர், சமூக ஆர்வலர் ஜெயந்த் என தெரிவித்தார்.

இதையடுத்து மகேஷ் திம்மரோடியை கைது செய்து எஸ்.ஐ.டி.,யினர் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராக கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் ஆகியோருக்கும் சம்மன் அனுப்ப தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், தர்மஸ்தலாவை சேர்ந்த பிரவீன் என்பவர், பெல்தங்கடி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 'மட்டன்னவரும், திம்மரோடியும் மக்களிடம் உள்ள நல்லிணக்கத்தையும், நம்பிக்கையையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன், சமூக வலைதளங்கள் மூலம், களங்கம் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டி.ஜி.பி., எச்சரிக்கை டி.ஜி.பி., சலீம், 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட வீடியோ:

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிடுவோரை, மாநில போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். அமைதியை சீர் குலைக்கும், கலவரத்தை துாண்டும், குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக, ஜாதி ரீதியாக, வெறுப்பு பேச்சுகளை பதிவிடும் தனிநபர் அல்லது அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us