/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாணி விலாஸ் மருத்துவமனையில் விரைவில் ரத்த சேகரிப்பு வங்கி வாணி விலாஸ் மருத்துவமனையில் விரைவில் ரத்த சேகரிப்பு வங்கி
வாணி விலாஸ் மருத்துவமனையில் விரைவில் ரத்த சேகரிப்பு வங்கி
வாணி விலாஸ் மருத்துவமனையில் விரைவில் ரத்த சேகரிப்பு வங்கி
வாணி விலாஸ் மருத்துவமனையில் விரைவில் ரத்த சேகரிப்பு வங்கி
ADDED : ஜூன் 27, 2025 11:12 PM
பெங்களூரு: பெங்களூரின் முக்கியமான தாய், சேய் மருத்துவமனையான வாணி விலாஸ் மருத்துவமனையில், நடப்பாண்டு ரத்த வங்கி திறக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை செய்கிறது.
இதுகுறித்து, பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
வாணி விலாஸ் மருத்துவமனையில், மாதந்தோறும் சராசரியாக 1,300 முதல் 1,500 பிரசவங்கள் நடக்கின்றன. இத்தகைய மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு வங்கி இல்லை.
நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்பட்டால், விக்டோரியா மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது.
வாணி விலாஸ் மருத்துவமனைக்கு, ஆண்டுதோறும், 3,600 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. விக்டோரியா மருத்துவமனைக்கே ஆண்டுக்கு 8,000 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.
இங்கிருந்தே வாணி விலாஸ் தாய் - சேய் மருத்துவமனைக்கும் பெறுவதால், ரத்தம் பற்றாக்குறை ஏற்படுகிறது.
வாணி விலாஸ் மருத்துவமனை, 700 படுக்கை வசதி கொண்டதாகும். இவற்றில் 500 படுக்கைகள் குழந்தை பெற்ற தாய்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிக ரத்த அழுத்தம், இதய பிரச்னை, ரத்தப்போக்கு, கர்ப்பப்பை உட்பட, பல்வேறு பிரச்னைகளால் கர்ப்பிணியர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு ரத்தம் அவசியம்.
இதை கருத்தில் கொண்டு, வாணி விலாஸ் மருத்துவமனையிலேயே ரத்த வங்கி திறக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டது.
தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும். ஆனால் இங்கு எவ்வளவு ரத்தம் சேகரமாகும் என்பதை, இப்போதே கூற முடியாது.
ஊழியர்கள் நியமிக்க வேண்டும். அதன்பின் மருந்துகள் கட்டுப்பாட்டு துறையிடம் அனுமதி பெற வேண்டும். நடப்பாண்டு இறுதியில், ரத்த வங்கி செயல்பட துவங்கும்.
இங்கு ரத்த வங்கி செயல்பட்டால் வேறு மருத்துவமனையை நாட வேண்டிய அவசியம் இருக்காது. கர்ப்பிணியர், குழந்தை பெற்ற பெண்களுக்கும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.