Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இரவு முழுதும் கொட்டிய கனமழையால் பெங்களூரு...வெள்ளக்காடானது!  குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் அவதி

இரவு முழுதும் கொட்டிய கனமழையால் பெங்களூரு...வெள்ளக்காடானது!  குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் அவதி

இரவு முழுதும் கொட்டிய கனமழையால் பெங்களூரு...வெள்ளக்காடானது!  குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் அவதி

இரவு முழுதும் கொட்டிய கனமழையால் பெங்களூரு...வெள்ளக்காடானது!  குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் அவதி

ADDED : மே 20, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: இரவு முழுதும் கொட்டி தீர்த்த கனமழையால் பெங்களூரு வெள்ளக்காடாக மாறியது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். சுரங்கப்பாதைகள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்சாரம் தடைபட்டதால் மக்கள் இருளில் தவித்தனர். காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார். மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய போவதாக கூறிய முதல்வர், கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்தார்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா, தமிழகத்தின் சில இடங்களில் உருவாகி உள்ள மேலடுக்கு காற்று சுழற்சி மற்றும் தெலுங்கானாவில் இருந்து வடதமிழகம் வரை பரவியுள்ள தாழ்வு மண்டலம் காரணமாக, தென் மாநிலங்களின் பல்வேறு இடங்களில் ஈரப்பதம் நிலவி வருகிறது. இது மழைப் பொழிவையும் கொடுக்கிறது.

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 17ம் தேதி இரவு பெய்த கனமழையால் ஹொரமாவு சாய் லே - அவுட்டில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2வது நாளாக இரவு முழுதும் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

எலக்ட்ரானிக் சிட்டி, பி.டி.எம்., லே - அவுட், சாந்திநகர், வில்சன் கார்டன், மல்லேஸ்வரம், ஆடுகோடி, லக்கசந்திரா, சில்க் போர்டு, பாகலுார், பெல்லந்துார், ஒயிட்பீல்டு, மஹாதேவபுரா, மாரத்தஹள்ளி, பனந்துார், கெங்கேரி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனமழையால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகள் குளங்கள், ஆறுகளாக மாறின. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

* 2 முதல் 3 அடி

லக்கசந்திராவில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் 2 முதல் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் பரிதவித்தனர்.

வீட்டில் இருந்த டிவி, பிரிஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தண்ணீரில் மூழ்கின. மின் ஒயர்களும் அறுந்து விழுந்தது. மின் ஒயர்களில் கால் வைத்தால் மின்சாரம் தாக்கி விடுமோ என்று, மக்கள் பீதியில் உறைந்தனர். குழந்தைகள் இருந்த வீடுகளில் அவர்களுக்கு எதுவும் ஆகி விட கூடாது என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டே இருந்தனர்.

சாந்தி நகரில் உள்ள சி.சி.பி., அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள 10 அறைக்குள், மழைநீர், சாக்கடை கால்வாய் தண்ணீர் இணைந்து கலந்தது. அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மழைநீரில் மூழ்கின. நேற்று காலை அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள், தண்ணீர் தேங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் வெளியே நின்று கொண்டு இருந்தனர். இதுபோல சாந்திநகரில் உள்ள பி.எம்.டி.சி., பணிமனை 2லும் தண்ணீர் புகுந்தது. பஸ்கள் பாதி அளவு மூழ்கின.

* தமிழக பஸ்கள்

நேற்று காலை 5:00 மணிக்கு பஸ்களை எடுக்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வந்தனர். ஆனால் பணிமனையில் இருந்து பஸ்களை எப்படி எடுப்பது என்று தெரியாமல் நின்றனர். பணிமனை மேலாளரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். இதனால் சாந்திநகர் பஸ் நிலையத்திற்கு பி.எம்.டி.சி., பஸ்கள் வருகை குறைவாக இருந்ததால் பயணியர் கூட்டம் அலைமோதியது. பணிமனைக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதன்பின் பஸ்கள் இயங்க துவங்கின.

பி.எம்.டி.சி., பணிமனை முன்பு செல்லும் சாலையில் தான், தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் தொலைதுார பஸ்களும் நிறுத்தி வைக்கப்படும். அந்த சாலை நேற்று வெள்ளக்காடானது. அங்கு தான் தமிழக அரசு பஸ்களும் நின்று கொண்டு இருந்தன. சாய் லே - அவுட்டை 2வது நாளாக வெள்ளம் சூழ்ந்தது. கோரமங்களா, இந்திராநகர், ஹெச்.ஆர்.பி.ஆர். லே - அவுட் உள்ளிட்ட பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் தண்ணீர் புகுந்தது. பைக், கார்கள் மூழ்கின.

* படகு மூலம் மீட்பு

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் நேற்று காலை எழுந்து பார்த்த போது, வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை பைக்குகளை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து சென்றனர். கார்களை மீட்பு வாகனம் மூலம் எடுத்து சென்றனர். பனந்துார் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை முழுதும் மூழ்கியது. இதனால் மாரத்தஹள்ளி - சர்ஜாபுரா இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுபோன்று பல இடங்களிலும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. சில இடங்களில் டிரான்ஸ்பார்மர்களில் ஏற்பட்ட பழுதால், இரவு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நகரின் பல பகுதிகளில் இருள் சூழ்ந்தது. சாய் லே - அவுட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்தவர்கள், ரப்பர் படகு மூலம் மீட்டு வரப்பட்டனர். மாநகராட்சி நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் டிராக்டரில் சென்று ஆய்வு செய்தார்.

ஒயிட்பீல்டு சன்னசந்திராவில் பெய்த கனமழையால் தனியார் நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு வேலைக்கு வந்த சசிகலா, 35 என்ற பெண் உயிரிழந்தார். அந்த பெண் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ள மான்யதா டெக் பார்க் வளாகத்திலும், மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது.

* வார் ரூமில் ஆய்வு

பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் காலை 8:30 மணியில் இருந்து நேற்று காலை 5:30 மணி வரை 10.39 செ.மீ., மழை கொட்டி தீர்த்து உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் நேற்று மாலை ஆய்வு செய்ய இருந்தனர்.

ஆனால், தொடர் மழை காரணமாக ஆய்வை அவர்கள் ரத்து செய்தனர். மாநகராட்சி வார் ரூமில் அமர்ந்து மழை பாதிப்புகள், மீட்புகளை முதல்வரும், துணை முதல்வரும் ஆய்வு செய்தனர். நகரில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

பாக்ஸ்கள்

வீட்டில் இருந்து வேலை

பெங்களூரில் கனமழை பெய்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஐ.டி., உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனங்களிடம் இருந்து அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்து உள்ளனர். பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., - எம்.பி., மோகன் தனது முகநுால் பக்கத்தில், அடுத்த 3 நாட்கள் ஐ.டி., நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்.

================

கர்ப்பிணி பெண் மீட்பு

சில்க் போர்டு பகுதியில் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. சில்க் போர்டு மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில், நேற்று காலை பி.எம்.டி.சி., பஸ் சென்றது. நடுவழியில் திடீரென பழுதாகி நின்றது. பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, பஸ் ஓரமாக நிறுத்தப்பட்டது. டிரைவர் இருக்கை பகுதியில் உள்ள ஜன்னல் வழியாக பயணியர் வெளியேற்றப்பட்டனர். இதில் கர்ப்பிணியும் ஒருவர். அவரது குடும்பத்தினரை வரவழைத்து போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

==========

நடுங்கும் வாகன ஓட்டிகள்

பெங்களூரில் மழை பெய்யும் போது, ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுவதும், இதனால் உயிரிழப்புகள் நடப்பதும் ஆண்டுதோறும் நடக்கிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பெய்த மழைக்கு, கத்ரிகுப்பே பகுதியில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் டிரைவர் உயிரிழந்தார்.

தற்போது கனமழை பெய்வதால் மரம் எந்த நேரத்தில் விழுமோ என்ற பயத்தில், வாகன ஓட்டிகள் உள்ளனர். சிக்னல்களில் நிற்கும் போது, அப்பகுதியில் உள்ள ராட்சத மரங்கள் தங்கள் மீது விழுந்து விடுமோ என்று அஞ்சி நடுங்குகின்றனர். மரங்களை பார்த்து கொண்டே இருக்கின்றனர். இங்கிருந்து சென்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர்.

=======

சிறிய பிரச்னையாம்!

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளில் பெங்களூரில் இதுவே அதிகபட்ச மழை. இவ்வளவு கனமழை பெய்யும் போது நகரில் சிறிய பிரச்னை ஏற்படுவது சகஜம் தான். எங்கள் குழு எல்லா இடத்திலும் பணியாற்றி வருகிறது. இரண்டு, மூன்று இடத்தில் மட்டும் நிரந்தர தீர்வு வேண்டும். அனைத்து துறைகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம்,'' என்றார்.

மழையால் மக்கள் பரிதவித்து வரும் நிலையில், இது சிறிய பிரச்னை என்று அலட்சியமாக கமிஷனர் கூறி இருப்பது மக்களை கொந்தளிக்க வைத்து உள்ளது.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us