Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஹாசனில் அர்ஜுனா யானை சிலை திறப்பு

ஹாசனில் அர்ஜுனா யானை சிலை திறப்பு

ஹாசனில் அர்ஜுனா யானை சிலை திறப்பு

ஹாசனில் அர்ஜுனா யானை சிலை திறப்பு

ADDED : ஜூன் 28, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
மைசூரு: மைசூரில் யானை அர்ஜுனா சிலையை வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே திறந்து வைத்தார்.

ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புரா தாலகாவில் யசலுார் அருகே காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில், 2023 டிசம்பர் 4ல், 'அர்ஜுனா' யானை உட்பட மூன்று கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன.

அப்போது காட்டு யானைக்கும், அர்ஜுனாவுக்கும் இடையே நடந்த மோதலில் படுகாயமடைந்து, அர்ஜுனா உயிரிழந்தது.

இந்த யானைக்கு, ஹாசன் மாவட்டத்தில் உள்ள டி.பி.குப்பே யானைகள் சரணாலயத்தில், 2.98 மீட்டர் உயரம், 3.74 மீட்டர் நீளத்தில், 650 கிலோ எடையில் சிலை அமைக்கப்பட்டது.

இந்த சிலையை, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

பின், அவர் பேசியதாவது: காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில், ஊழியர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக, 'கேப்டன்' என்று அழைக்கப்பட்ட அர்ஜுனா யானை, தன் உயிரை தியாகம் செய்தது.

அந்த வேதனை இன்றும் என் இதயத்தில் வலியை ஏற்படுத்துகிறது.

இங்கு அமைந்துள்ள இந்த நினைவு சின்னம், படிப்படியாக மேம்படுத்தப்படும். அர்ஜுனா யானை பங்கேற்ற பல்வேறு செயல்பாடுகளின் படங்கள், தசரா விழாவின் அரிய தருணங்கள், துணிச்சல், சாகசத்தை அனைவரும் அறியும் வகையில், இங்கு காட்சிப்படுத்தப்படும்.

மங்களூரை சேர்ந்த சிற்ப கலைஞர் தனஞ்செய் வடிவமைத்துள்ள இந்த யானை, தத்ரூபமாக அர்ஜுனா நம் முன் நிற்பது போன்று இருக்கிறது.

தசரா ஜம்பு சவாரியில் எட்டு முறை தங்க அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை, இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவரின் நினைவு, கன்னடர்களின் இதயங்களில் என்றென்றும் இருக்கும்.

ஹாசனில் இறந்த யானையை, பல்லேவுக்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். ஆனால், இறந்த யானையை, நுாற்றுக்கணக்கான கி.மீ., தொலைவு கொண்டு செல்வது சாத்தியமல்ல.

அத்துடன் இறந்த யானையின் உடலில் காற்று நுழைந்ததால், எப்போது வெடிக்குமோ என்ற அச்சம் இருந்தது. எனவே, யசலுார் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., அனில் சிக்கமாது, மைசூரு மண்டல தலைமை வனபாதுகாவலர் மாலதி பிரியா, துணை வன அதிகாரி சீமா உட்பட பலர் பங்கேற்றனர்.

டி.பி.குப்பே யானைகள் சரணாலயத்தில், அர்ஜுனா யானை சிலையை, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே திறந்துவைத்தார். உடன், மைசூரு மண்டல தலைமை வன பாதுகாவலர் மாலதி பிரியா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us