Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வீடு வழங்க ரூ.40,000 லஞ்சம் மற்றொரு ஆடியோவால் பரபரப்பு

வீடு வழங்க ரூ.40,000 லஞ்சம் மற்றொரு ஆடியோவால் பரபரப்பு

வீடு வழங்க ரூ.40,000 லஞ்சம் மற்றொரு ஆடியோவால் பரபரப்பு

வீடு வழங்க ரூ.40,000 லஞ்சம் மற்றொரு ஆடியோவால் பரபரப்பு

ADDED : ஜூன் 23, 2025 09:27 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : ஏழைகளுக்கு வீடுகள் வழங்குவது தொடர்பாக, மற்றொரு ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 40,000 ரூபாய் லஞ்சம் கேட்டது தொடர்பான ஆடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில நாட்களுக்கு முன், கலபுரகி, ஆளந்தா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல், 'வீட்டு வசதித்துறையில் ஊழல் நடக்கிறது. லஞ்சம் பெற்று கொண்டு வீடுகள் வழங்கப்படுகின்றன' என, குற்றம்சாட்டினார்.

இது குறித்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகானின் செயலர் சர்பராஜ் கான் மற்றும் பி.ஆர்.பாட்டீல் இடையிலான உரையாடல் வெளியாகி, காங்கிரஸ் அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஆடியோவில் இருப்பது, தனது குரல்தான். வீட்டு வசதித்துறையில் ஊழல் நடப்பது உண்மைதான் என, பி.ஆர்.பாட்டீல் கூறியிருந்தார். இப்போது மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது.

விஜயபுரா மாவட்டம், நாகடானா காங்கிரஸ் எம்.எல்.ஏ., விட்டல் கடகதொண்டின் அந்தரங்க உதவியாளர் என, கூறப்படும் நபர் ஒருவர், குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கொடுக்க, லஞ்சம் கேட்டுள்ளார்.

நேற்று இந்த ஆடியோ வெளியாகி, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்புரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கிராமம் ஒன்றில் வீடுகள் வழங்குவது தொடர்பாக ஆடியோவில் பேசியுள்ளனர். எம்.எல்.ஏ.,வின் அந்தரங்க செயலர், 'எங்களிடம் 21 வீடுகள் உள்ளன.

'ஒவ்வொரு வீட்டுக்கும் உங்கள் கிராமத்தினர் 40,000 ரூபாய் வழங்குகின்றனர். நீங்கள் 40,000 ரூபாய் கொடுத்தால், உங்களுக்கு வீடு கிடைக்கும். இல்லாவிட்டால் வேறு ஒருவருக்கு கிடைக்கும்' என கூறியுள்ளார்.

இது குறித்து, விட்டல் கடகதொண்ட் கூறியதாவது:

ஏழைகளுக்கு வழங்கப்படும் வீடுகளுக்கு, நான் லஞ்சம் பெறவில்லை. நான் லஞ்சம் பெற்றதாக நிரூபித்தால், அதற்கு பொறுப்பேற்று, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன்.

ஏழைகள், குடிசைவாசிகளுக்கு வழங்கும் வீடுகளுக்கு லஞ்சம் பெறுவது மக்களுக்கு எதிரானது. இதை யார் செய்தாலும், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். என் அந்தரங்க செயலர் தவறு செய்திருந்தாலும், அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us