/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓய்வு பெற்று 15 ஆண்டாகியும் பணியில் தொடரும் அதிகாரி ஓய்வு பெற்று 15 ஆண்டாகியும் பணியில் தொடரும் அதிகாரி
ஓய்வு பெற்று 15 ஆண்டாகியும் பணியில் தொடரும் அதிகாரி
ஓய்வு பெற்று 15 ஆண்டாகியும் பணியில் தொடரும் அதிகாரி
ஓய்வு பெற்று 15 ஆண்டாகியும் பணியில் தொடரும் அதிகாரி
ADDED : ஜூன் 26, 2025 12:54 AM

மங்களூரு : மங்களூரு மாநகராட்சியில், பல ஊழல்கள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓய்வு பெற்று 15 ஆண்டுகளாகியும், அதிகாரி ஒருவர் பணியில் நீடித்து, ஊதியம் பெற்று வருவதை லோக் ஆயுக்தா கண்டுபிடித்துள்ளது.
தட்சிண கன்னட மாவட்டம், மங்களூரு மாநகராட்சியில், பிப்ரவரி 28ல், மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக் காலம் முடிவடைந்தது.
அதன்பின் தேர்தல் நடக்கவில்லை. அதிகாரிகளே மாநகராட்சியை நிர்வகிக்கின்றனர். இவர்களின் ஊழல் எல்லை மீறியுள்ளது. ஒவ்வொரு பணிக்கும் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பொதுமக்களிடம் இருந்து, தொடர்ந்து புகார் வந்ததால், சில நாட்களுக்கு முன், மங்களூரு மாநகராட்சியில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு நடந்த ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.
கமிஷனர் அலுவலகத்தில், கோப்புகள் தேங்கி இருந்ததையும், இடைத்தரகர்களின் தலையீட்டையும் கண்டறிந்தனர். இடைத்தரகர் ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சுகாதாரப் பிரிவில் ஊழல் அதிகம் உள்ளது. இப்பிரிவில் அதிகாரி ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே, ஓய்வு பெற்றுள்ளார்.
ஆனால் இப்போதும் அதே பணியில் தொடர்ந்து, ஊதியம் பெறுவதை, லோக் ஆயுக்தா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
நகர திட்டப்பிரிவில், கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கும்போது, பின்பற்ற வேண்டிய எந்த விதிகளையும், மாநகராட்சி அதிகாரிகள் பின்பற்றவில்லை. விதிமீறலான கட்டடங்களை இடிப்பது கட்டாயம் என்றாலும், அதிகாரிகள் அதை செய்யவில்லை. விதிமீறலான கட்டடங்களுக்கு கமிஷனர் அனுமதி அளித்துள்ளார்.
அனைத்து முறைகேடுகளையும், வெளிச்சத்துக்கு கொண்டு வந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கோப்புகளை கவனிக்காமல் தேக்கி வைத்திருப்பது மற்றும் ஊழல் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராகின்றனர்.