Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/நெற்பயிரில் குலைநோய் கட்டுப்பாடு

நெற்பயிரில் குலைநோய் கட்டுப்பாடு

நெற்பயிரில் குலைநோய் கட்டுப்பாடு

நெற்பயிரில் குலைநோய் கட்டுப்பாடு

PUBLISHED ON : ஜன 10, 2024


Google News
Latest Tamil News
நெற்பயிரின் வளர்ச்சியை பாதிக்கும் குலைநோயானது பைரிக்குலேரியா ஒரைசா என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இவை காற்று, விதை மற்றும் நோய் தாக்கிய வைக்கோல் மூலம் பரவுகிறது.

இரவில் 20 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலை, அதிகநேர பனிப்பொழிவு, காற்றில் 85 முதல் 90 சதவீதம் ஈரப்பதம் ஆகியவை இந்த நோய் பரவுவதற்கான சூழ்நிலையை உருவாக்கும்.



அறிகுறிகள் என்ன


நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரைத் தாக்குகிறது. இலைகளின் மேல் பழுப்புநிறத்தில் சாம்பல் நிற மையப் பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவப் புள்ளிகள் காணப்படும். பலபுள்ளிகள் ஒன்று சேர்ந்து ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். தீவிரமாகத் தாக்கும் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று காணப்படும்.

நெற்பயிரின் கழுத்துப் பகுதி கறுப்பு நிறமாக மாறி கதிர் மணிகள் சுருங்கியும், உடைந்தும் தொங்குவதை கழுத்துக் குலைநோய் என்றும் கணுக்களில் தாக்கி கறுப்பு நிறமாக மாறி உடைவதை கணுக்குலைநோய் என்றும் சொல்லப்படும். இதன் தாக்குதலால் 30 முதல் 60 சதவீதம் வரை நெல் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

வயல்கள், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள களைச் செடிகளை அகற்றவேண்டும். நோய்க்கு எதிர்ப்புத்திறன் அல்லது தாங்கி வளரும் ஆடுதுறை 38, கோ 47, கோ 51, கோ 52, கோ 55, திருச்சி 4 ரகங்களை தேர்வு செய்து விதைக்கலாம்.

கார்பன்டாசிம் அல்லது ட்ரைசைக்ளோசோல் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் எதிர் உயிர்க்கொல்லி மருந்தை கலந்தும் விதை நேர்த்தி செய்யலாம்.

அறிகுறி தென்பட்டால் 20 சென்ட் நாற்றங்காலில் 25 கிராம் கார்பன்டாசிம் மருந்தை தெளிக்கலாம். தழைச்சத்து உரங்களை இடக்கூடாது. எக்டேருக்கு 500 லிட்டர் தண்ணீரில் 500 கிராம் கார்பன்டாசிம் அல்லது 500 மில்லி அசாக்சிஸ்ட்ரோபின் அல்லது 500 கிராம் ட்ரைசைக்ளோசோல் கலந்து பயிர் முழுவதும் படும்படி தெளிக்க வேண்டும். மருந்துக் கரைசல் இலைகளில் நன்கு படிய சாண்டோலிட் அல்லது பைட்டோவெட் திரவசோப்பை ஒருலிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி சேர்த்து கலக்க வேண்டும்.

- சிங்காரலீனா உதவி இயக்குநர் கண்ணன் விதைச்சான்று அலுவலர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மதுரை, 97883 56517.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us